சிலாங்கூர், 7 நவம்பர் (பெர்னாமா) -- 2021-லிருந்து 2022-ஆம் ஆண்டுக்குள் நிதி ஒப்பந்த ஆவணங்களைத் தயாரிப்பது தொடர்பான ஊழலைப் புகாரளிக்கத் தவறிய குற்றத்தை இரண்டு முன்னாள் வங்கி அதிகாரிகள் இன்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.
41 வயதான மொஹமட் ஹைகால் ஜமாலுதீன்-னுக்கு 25,000 ரிங்கிட்டும் 28 வயதான அமீரா நபிலா மொஹமட் ஜமாருதீன்-க்கு 6,000 ரிங்கிட்டும் என்று நீதிபதி டத்தோ மொஹமட் நசீர் நோர்டின் தனித்தனியாக அபராதம் விதித்தார்.
அபராதம் செலுத்தத் தவறினால் மொஹமட் ஹைகால்-லுக்கு 30 மாத சிறைத் தண்டனையும், அமீரா நபிலா-வுக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐந்து தேர்வு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 15,920 ரிங்கிட் ரொக்கப் பணத்தை லஞ்சமாக பெற்றதோடு சட்ட நிறுவனத்தின் பிரதிநிதி மூலம் அவரின் வங்கிக் கணக்கில் அத்தொகை செலுத்தப்பட்டதாக மொஹமட் ஹைகால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி வரை பெட்டாலிங் ஜெயாவைச் சுற்றியுள்ள இரண்டு வங்கிக் கிளைகளில் 24 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள வீட்டு நிதி ஒப்பந்தங்கள் தொடர்புடைய ஐந்து ஆவணங்களைத் தயாரிக்க சட்ட நிறுவனத்தை பரிந்துரைத்ததற்காக, அந்த கையூட்டுத் தொகை, ஊதியமாக வழங்கப்பட்டது.
அதேவேளையில், 2021-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி, Shah Alam-மில் உள்ள வங்கி கிளை ஒன்றில் 9 லட்சத்து 24,387 ரிங்கிட் 20 சென் தொகையிலான வீட்டு கடன்கள் இரண்டை பெற, சட்ட நிறுவனத்தை பரிந்துரைத்ததற்காக தமது வங்கிக் கணக்கில் 3,201 ரிங்கிட் லஞ்சத்தை ஊதியமாக பெற்றதற்காக அமீரா நபிலா ஒரு தேர்வு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
அவ்விருவரும் 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், SPRM சட்டம் செக்ஷன் 16 (a)(A)-இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அதோடு, அவர்கள் 2009-ஆம் ஆண்டு SPRM சட்டம் செக்ஷன் 25 (1)-ஐ மீறியதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு லட்சம் ரிங்கிட்டிற்கும் மேற்போகாத அபராதம் அல்லது 10 ஆண்டுகளுக்கு மேல்போகாத சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் அதே சட்டம் செக்ஷன் 25 (2)-இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)