உலகம்

இவ்வாண்டின் இறுதிக்குள் இலங்கை பொருளாதாரம் மீட்சிப் பெறும்

08/11/2025 04:34 PM

கொழும்பு, 08 நவம்பர் (பெர்னாமா) -- இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு செயல்முறையை நிறைவு செய்யும் இறுதி கட்டத்தில் உள்ளதாக அதன் அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார்.

இதன் வழி, 2022-ஆம் ஆண்டு, நிதி நெருக்கடியால் சரிந்த நாட்டின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2019-ஆம் ஆண்டு நாட்டில் காணப்பட்ட பொருளாதார நிலை, 2029-ஆம் ஆண்டுக்குள் வழக்கநிலைக்கு திரும்பும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், இவ்வாண்டின் இறுதிக்குள் பொருளாதாரத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க முடியும் என்று திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

"பொருளாதார திவால் நிலை நமது நாட்டிற்கு பெரும் இழப்பை உருவாக்கியுள்ளது. அதாவது நெருக்கடிக்கு முன்பு நிலவிய பொருளாதார நிலைமையை அடைய 10 ஆண்டுகள் ஆகும். அதன்படி, 2022-ஆம் ஆண்டின் பொருளாதார நிலைமை 2029-இல் மீண்டும் மீட்கப்படும் என்று பலர் கணித்துள்ளனர். இருப்பினும், 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள், நெருக்கடிக்கு முன்பு இருந்த பொருளாதார நிலைமையை மீண்டும் பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,'' என்றார் அவர்.

நேற்று நாடாளுமன்றத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது, திசாநாயக்க அவ்வாறு கூறினார்.

இலங்கையின் பொருளாதாரம் தற்போது நிலையானதாகவும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுள்ளதாகவும் நிதி அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.

2022-ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக அந்நாடு மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்தித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)