உலகம்

ஜி20 உச்சநிலை மாநாட்டை புறக்கணித்த அமெரிக்கா

08/11/2025 04:45 PM

வாஷிங்டன் டீ.சி, 08 நவம்பர் (பெர்னாமா) -- இந்த மாத இறுதியில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அந்நாட்டில் வெள்ளையர்கள் படுகொலை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் தாம் இம்முடிவை எடுத்திருப்பதாக அவர் தமது Truth Social சமூக தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், தம்மை பிரதிநிதித்து கலந்து கொள்வார் என்று டிரம்ப் முன்னதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தமது எண்ணத்தை மாற்றி, அமெரிக்கா அம்மாநாட்டை முற்றிலுமாகப் புறக்கணிக்கும் என்று அவர் விவரித்தார்.

அந்நாட்டில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவில் நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி குடியேறிகள் கொல்லப்படுவதால், அந்நாட்டில் ஜி-20 உச்சநிலை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிகப் பெரிய அவமானம் என்று அவர் சாடியிருக்கிறார்.

அடுத்த ஆண்டு ஜி-20 உச்சநிலை மாநாட்டை தாம் அமெரிக்கா மயாமியில் நடத்த ஆவலாக இருப்பதாகவும் டிரம்ப் தமது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாண்டுக்கான ஜி-20 உச்சநிலை மாநாடு நவம்பர் 22-23-ஆம் தேதிகளில் ஜோகன்னஸ்பர்கில் நடைபெறவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)