பிரிக்பீல்ட்ஸ், 09 நவம்பர் (பெர்னாமா) -- அண்மைய காலமாக நாட்டில் உள்ள சில பள்ளிகளில் பதிவு செய்யப்படும் குற்றச் செயல்கள் வருத்தம் அளிக்கின்றன.
மாணவர்களிடையே அதிகரிக்கும் இது போன்ற ஒழுக்கச் சீர்கேடுகளுக்குப் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் இதனை நிவர்த்தி செய்வதற்கு மீண்டும் பிரம்படி தண்டனையை அமல்படுத்த ஆலோசிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட பலர் பரிந்துரைத்திருக்கின்றனர்.
பிரம்படி தண்டனை குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களை ஒழுங்குபடுத்தி நெறிபடுத்துமா என்பது குறித்து பெர்னாமா செய்திகள் கண்ணோடடம் ஒன்றை மேற்கொண்டது.
''கட்டொழுங்கு பிரச்சனைகளில் ஈடுபடும் மாணவர்களுக்குப் பிரம்படி வழங்க அனைத்து தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்து அதனை அமல்படுத்தினால் குற்றங்கள் தொடராமல் இருப்பதற்கான நிரந்தர தீர்வாக அத்தண்டனை அமையாது,'' என்று குற்றவியல் நிபுணர் மற்றும் இ.எல்.எம் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் ஷங்கர் துரைராஜா தெரிவித்தார்.
பிரம்படி தண்டனை மன உளைச்சல், பகைமை உணர்வு உள்ளிட்ட பல எதிர்மறை விளைவுகளை மாணவர்களிடையே ஏற்படுத்தலாம் என்பதால் பிரம்படி தண்டனை ஒரு தற்காலிக தீர்வாகவே இருக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனைக் கூறினார்.
இதனிடையே, கட்டொழுங்கு பிரச்சனையை எதிர்நோக்கும் மாணவர்களைக் கட்டுப்படுத்த பிரம்படி தண்டனையைச் செயல்படுத்தலாம் என்றாலும் அது தவறான முறையிலும் மாணவர்களைத் துன்புறுத்தும் விதத்திலும் இருக்கக் கூடாது என்பது மக்கள் சிலரின் கருத்துகளாக அமைந்தது.
"பிள்ளைகள் பெற்றோரின் சொல் பேச்சைக் கேட்ட மறுப்பதுடன், அவர்களின் போக்கில் வாழ்கின்றனர். முன்பு போன்று பள்ளிக்கூடங்களில் முறையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். இதனால் பகடிவதை உள்ளிட்ட பல தகாத செயல்கள் குறையலாம்," என்று திலகவேணி ராஜன், ஜனனி நாகேந்திரன், தேவகி கோவிந்தன் ஆகியோர் கருத்துரைத்தார்.
இது மாணவர்களில் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நல்ல முயற்சியாகவும் பள்ளி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சிறப்பான நடவடிக்கையாகவும் அமையும் என அவர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் அறிவியல், சுகாதாரக் கல்வி, இசை, காட்சிக் கலை, டிவெட் மற்றும் இலக்கவியல் போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து Alam dan Manusia (சுற்றுச்சூழல் மற்றும் மனிதன்) எனும் புதிய பாடம் 2027ஆம் ஆண்டு தொடங்கி பள்ளி பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் கல்வி அமைச்சு கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இப்புதிய பாடம் மாணவர்களின் பண்பு நலனை மேம்படுத்தும் என கல்வி அமைச்சு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)