வெளிநாடுகளில் மலேசிய கைதிகளுக்கான உதவிகள் வேண்டுகோள் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகிறது

10/11/2025 08:36 PM

ஜாலான் பார்லிமன், 10 நவம்பர் (பெர்னாமா) -- வெளிநாடுகளில் குற்றவியல் குற்றங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களுக்கான தேவையான அனைத்து உதவிகளும் சம்பந்தப்பட்ட நபரின் வேண்டுகோளின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகிறது.

மாறாக தானாகவே முன்வந்து அரசாங்கம் வழங்குவதில்லை.

குடும்பத்திற்குத் தெரிவிப்பது உட்பட சட்ட சேவையை ஏற்பாடு செய்வது மற்றும் கைதியின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்ற தூதரக உதவிகளும் அதில் அடங்குவதோடு சம்பந்தப்பட்ட நபர் முறையாகத் கேட்கும்போது மட்டுமே அவை செய்யப்படும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் கூறினார்.

ஒவ்வொரு நடவடிக்கைகளும் நாட்டின் விதிமுறைகள் மற்றும் வெளிநாட்டில் உள்ள தமது குடிமக்களைப் பாதுகாக்கும் ஒரு நாட்டின் பொறுப்பை நிர்ணயிக்கும் 1963ஆம் ஆண்டு வியன்னா தூதரக மாநாட்டு கொள்கைகளுக்கு உட்பட்டது என்று முஹமட் ஹசான் கூறினார்.

''அவர்கள் தொடர்பு கொண்டால் நாம் கைது செய்யப்பட்ட மலேசியர்களைச் சந்தித்து அவர்களின் தேவைகள் என்ன, குடும்பத்துக்குத் தெரிவிக்க வேண்டுமா, அவர்களுக்குப் பிடித்த வழக்கறிஞரை ஏற்பாடு செய்ய வேண்டுமா என்பதையெல்லாம் விசாரிப்போம். ஆனால் சில நேரங்களில் மலேசியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதே நமக்குத் தெரியாமல் போகிறது,'' என்று டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.

இன்று மக்களவையில் குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஷு கி எழுப்பிய கூடுதல் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

நவம்பர் எட்டாம் தேதிவரை இணைய மோசடி குற்றங்களுக்காக மொத்தம் 837 மலேசியர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)