பொது

சபா வருவாய் விவகாரம்; தீர்ப்புக்கான காரணங்கள் மீதே அரசாங்கம் மேல்முறையீடு - பிரதமர்

13/11/2025 05:58 PM

ஜாலான் பார்லிமன், 13 நவம்பர் (பெர்னாமா) -- சபாவிற்கு 40 விழுக்காடு சிறப்பு வருவாய் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில தவறுகளைக் கண்டறிந்த பின்னரே தீர்ப்புக்கான காரணங்கள் மீது மத்திய அரசாங்கம் மேல்முறையீடு செய்ததாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹில் விளக்கம் அளித்தார்.

தேசிய சட்டத்துறை அலுவலகத்தின் ஆலோசனைக்குப் பின்னர் மத்திய அரசாங்கத்தின் புரிதலின் அடிப்படையில் சட்ட வரம்பிற்கு அப்பாற்பட்டு தீர்ப்புக்கான காரணங்கள் இருப்பதாகப் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

2021ஆம் ஆண்டுக்குப் பிறகு வழங்கப்பட்ட சிறப்பு ஒதுக்கீடுகளை மறுஆய்வு செய்வது சட்டவிரோதமானது மற்றும் பகுத்தறிவற்றது என்றும் 1974ஆம் ஆண்டு முதல் மத்திய அரசாங்கம் செய்த பெரிய தவறு என்றும் தீர்ப்புக்கான காரணங்களில் கூறப்பட்டிருந்தாக டத்தோ ஶ்ரீ அன்வார் சுட்டிக் காட்டினார்.

''அனைத்தும் சட்டவிரோதமாகவும் பகுத்தறிவற்றதாகவும் நடைமுறை ரீதியிலும் முறையற்றதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சபா மாநில மீதான பொறுப்பைப் புறக்கணித்தது. இது மிகவும் கடினமான தீர்ப்பாகும்," என்று டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறினார்.

பெரா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக இருந்தபோதே ​​சிறப்பு ஒதுக்கீட்டு விகிதத்தை மறுபரிசீலனைச் செய்ய மத்திய அரசாங்கம் மற்றும் சபா அரசாங்கத்துக்கு இடையிலான பேச்சுவார்த்தைச் செயல்முறை மேற்கொள்ளப்பட்டதாகப் பிரதமர் கூறினார்.

அவ்விகித உயர்வு ஒருதலைப்பட்சமாக இல்லை என்றும் அவர் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)