பொது

40% சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை தனியாக மேற்கொள்ளப்பட்டது 

13/11/2025 06:10 PM

ஜாலான் பார்லிமன், 13 நவம்பர் (பெர்னாமா) -- சபா மாநில வருவாயில் இருந்து 40 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை தனியாக மேற்கொள்ளப்பட்டது.

அம்மாநிலம் பெற்ற வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் உள்ள எந்தவொரு ஒதுக்கீட்டிலும் அது உட்படுத்தப்படவில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுப்படுத்தினார்.

நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை வரையும்போது மத்திய மாநில மற்றும் பொதுப் பட்டியல் அட்டவணைகளின்படி நிலையான ஒதுக்கீடுகளின் அடிப்படையில் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

''ஆனால் நாம் என்ன செய்தோம் 2026 வரவு செலவுத் திட்டத்தில் நிலையானதை விட அதிகமாக அறிவித்தோம். நான் சற்று முன்பு கூறியது போல மின்சாரம் பான் பொர்னியோ நெடுஞ்சாலை திட்டம் உட்பட மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் வழங்கும் அலைவரிசைகள் ஆகியவை அடங்கும். அதுமட்டுமே 700 கோடி முதல் 800 கோடி வரை வந்துவிட்டது. எனவே, அந்த 40 விழுக்காடு சிறப்பு நிதியின் தேவை குறித்து நீங்கள் சிந்தித்தால் கண்டிப்பாக வரவு செலவுத் திட்டத்தை முழுமையாகப் பார்க்க வேண்டும்,'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.

இன்று மக்களவையில் கேள்வி பதில் நேரத்தின் போது சபா மாநிலத்திற்கு உரிமையுள்ள வருவாயின் வரையறை மற்றும் பெறப்பட்ட பிற ஒதுக்கீடுகளுடன் சிறப்பு நிதிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ தக்கியுடின் ஹாசன் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

பெட்ரோலியத்தின் வருவாயிலிருந்து 95 விழுக்காடு மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்படுவதாகவும் மீதமுள்ள தொகை மாநில அரசாங்கத்திற்கு வழங்கப்படுவதாகக் கூறும் சில கட்சிகளின் கருத்து தவறானது என்றும் அன்வார் சாடினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)