சிறப்புச் செய்தி

மலேசியர்களிடையே அதிகரித்து வரும் நீரிழிவு நோய்

14/11/2025 04:11 PM

கோலாலம்பூர், 14 நவம்பர் (பெர்னாமா) --   மனித உயிருக்கு மரண பயத்தை ஏற்படுத்தும் உயிர்க் கொல்லி நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்று.

உலகில், குறிப்பாக மலேசியாவில் சுமார் 47 லட்சத்து 53,900 பேர், அதாவது 21.1 விழுக்காட்டினர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அனைத்துலக நீரிழிவு சம்மேளனம் ஐ.டி.எஃப்-பின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்நோயை முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும், அதனைக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றார், மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் மூத்த ஆலோசகர் டத்தோ டாக்டர் ரிஷா மாணிக்கம்.

மனித உடலில் உள்ள கணையம், INSULIN எனப்படும் கணையச் சுரப்பு நீரைப் போதுமான அளவில் உற்பத்தி செய்யாதபோது அல்லது உற்பத்தி செய்தும் உடல் அந்நீரைத் திறம்பட பயன்படுத்த முடியாத போது நீரிழிவு நோய் மனித உடலைத் தாக்குகின்றது.

இது ஒருவரை மட்டுமே பாதிக்கக்கூடிய நோயாக கருதாமல் மரபணு ரீதியில் ஒரு குடும்பத்தை அல்லது ஒரு சமூகத்தை ஆட்கொள்ளக்கூடிய நோயாக பார்த்தால், அதனை எளிய முறையில் தடுக்க முடியும் என்று டாக்டர் ரிஷா மாணிக்கம் கூறினார்.

இந்நிலையில், நீரிழிவு நோய்க்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் குறித்து அவர் இவ்வாறு விவரித்தார்.

''சில நேரங்களில் அதிகம் நீர் அருந்துவர். எவ்வளவு நீர் குடித்தாலும் தாகம் எடுத்து கொண்டே இருக்கும். வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உணவு உட்கொள்வார்கள். பலமுறை சிறுநீர் கழிப்பார்கள். இரவில் தூங்கும்போது அதிக முறை சிறுநீர் கழிக்க எழுந்திருப்பார்கள். உடல் மெலிந்து சோர்ந்து காணப்படும். ஒரு நிலையாக அவர்கள் இருக்க மாட்டார்கள்'', என்று அவர் கூறினார்.

இதனிடையே, நீரிழிவு நோய் கண்டவர்கள் முறையே மருத்துவரிடம் செல்வதை விடுத்து, சுயமாக செய்யும் சில தவறுகள் குறித்தும் டாக்டர் ரிஷா மாணிக்கம் எச்சரித்தார்.

''நீங்கள் சுயமாக முடிவு செய்து வீட்டிலுள்ள அம்மாவின் மருந்துகளை எடுத்து உட்கொள்ளக்கூடாது. பலர் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மருந்துகளை உட்கொள்வார்கள். இன்று சாப்பிடுவது, நாளை சாப்பிடாமல் இருப்பது. அதுபோன்று இருக்கக்கூடாது. அதேநேரத்தில், நோய் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பதை நீங்கள் உணர்ந்தால் கண்டிப்பாக மருத்துவர் உங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துவார்கள். எனவே, இவை அனைத்திற்கும் பயந்து சிலர் தப்பி விடுகின்றனர்'', என்றார் அவர்.

உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு முறை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை முறையாக பின்பற்றுவதன் மூலம் ஒருவர் நீரிழிவு நோயிலிருந்து குணமடைய முடியும் என்று அவர் அறிவுறுத்தினார்.

கூடுதலாக, நீரிழிவு நோயினால், இரத்த ஓட்டம் தடைப்பட்டு கால் பகுதியில் புண்கள் அல்லது நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்நோக்குபவர்களுக்கு பாதத்தில் அழுத்தம் தருவது அவசியம் என்று டாக்டர் ரிஷா மாணிக்கம் வலியுறுத்தினார்.

''நரம்பு தளர்ச்சி ஏற்படும் நேரத்தில், நீரிழிவு நோயினால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு புண்கள் குணமடைய கால அவகாசம் எடுத்துக் கொள்வது, கால் குடைச்சல், மறுத்து போவது, தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். அதனால் கால் பிடிப்பும் ஒரு முக்கியமான ஒன்று. எனவே, அதையும் கருத்தில் கொள்ளுங்கள்'', என்று டாக்டர் ரிஷா மாணிக்கம் கூறினார்.

இன்று அனுசரிக்கப்படும் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு பெர்னாமா செய்திகள் தொடர்புக் கொண்டபோது, அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நோய்க்கான விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் ''வாழ்க்கை நிலைகளை கடந்த நீரிழிவு நோய்'' என்ற கருப்பொருளில் இவ்வாண்டிற்கான அத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)