சிறப்புச் செய்தி

ஐந்தில் இரண்டு பேர் தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதை அறிந்திருக்கவில்லை - பி.ப.ச

14/11/2025 06:50 PM

கோலாலம்பூர், 14 நவம்பர் (பெர்னாமா) -- தேசிய சுகாதாரம் மற்றும் நோயுற்ற தன்மை கணக்கெடுப்பின் படி, மலேசியர்களில் ஐந்தில் இரண்டு பேர் தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதை அறிந்திருக்கவில்லை என்பது கவலையளிப்பதாக  பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் இதில் பாதிக்கப்படுவதாக அச்சங்கத்தின் கல்வி & ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

''இதற்கு காரணம் மலேசியர்கள் அதிகம் இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுகள், பானங்கள், இனிப்பு வகைகளை உண்பதுதான். குளிர்பானங்கள் மட்டுமின்றி தேநீர், காப்பிகளிலும் அதிக இனிப்புகளைச் சேர்த்துக் கொள்கின்றனர்,'' என்றார் அவர்.

இந்த நீரிழவு நோய் உடலில் அல்லது ரத்தத்தில் சக்கரை அளவை அதிகரிப்பது மட்டுமின்றி கூடுதலாக, பார்வைக் குறைப்பாடும், உறுப்புகள் துண்டிப்பு அல்லது சேதம், இருதய நோய், பக்கவாதம், சிறுநீரகப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று சுப்பாராவ் எச்சரித்தார்.

இதனிடையே,  நீரிழிவு நோய் ஏற்படாமல் இருப்பதற்கும் அதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும் ஆரோக்கியமான உணவுப்பழக்க முறையைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

''ஆக, சீனி ஏதும் இல்லாமல் உணவு முறைகளைப் பின்பற்ற பழகிக் கொள்ள வேண்டும். வெள்ளைச் சீனிக்கு பதிலாக வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றை பயன்படுத்தலாம்,'' என்றார் அவர்.

எனவே, சுகாதாரமான வாழ்க்கை முறைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து, நீரிழிவு நோயிலிருந்து விடுபடுவதற்கு மக்கள் முயற்சிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)