சிலாங்கூர், 14 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த வாராம் 75 கிலோ கிராம் எடைக் கொண்ட கெதமின் வகை போதைப் பொருளை வைத்திருந்ததாக தாய்லாந்து அமலாக்க தரப்பு கைது செய்திருந்த உள்நாட்டு ஆடவர்; நாடு கடந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நாட்டில் தீவிரமாக செயல்படுவதாக நம்பப்படும் அக்குழுவின் எஞ்சிய உறுப்பினர்களைக் கண்டறிய தங்கள் தரப்பு தற்போது தாய்லாந்து அதிகாரிகளோடு இணைந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்ற புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
முன்னதாகவே சந்தேக நபரின் மீது குற்றச்செயல்கள் பதிவாகியிருப்பதுச் சோதனைகள் மற்றும் விசாரணைகளில் கண்டறியப்பட்டது.
மேலும், அதே கும்பலில் ஈடுப்பட்டிருப்பதாக நம்பப்படும் பலரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
''அரச தாய்லாந்து போலீஸ் மேற்கொள்ளும் விசாரணை தொடர்பான அண்மைய தகவல்களைப் பெற அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். எனவே, தாய்லாந்தில் அவர் மீது குற்றம் சாட்டுவதற்கான ஆதாரங்கள் இருக்கும் நிலையில் தாய்லாந்து அதிகாரிகள் வழக்கை முடிக்கும் வரை நாங்கள் காத்திருக்கிறோம் என்றார் டத்தோ ஹுசேன் ஒமார் கான்.
தாய்லாந்து அதிகாரிகள் தாங்கள் சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேக நபர்களைக் குற்றஞ்சாட்டுவதற்கு வலுவான அடிப்படையைக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் பொதுவாக கைது செய்யும் நாடே வழக்கைத் தொடரும்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)