கினபத்தாங்கன், 15 நவம்பர் (பெர்னாமா) -- லாமக் சட்டமன்றத் தொகுதியைத் தற்காத்துப் போட்டியிடும் அம்மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ரடின் ஆறுமுனை போட்டியை எதிர்கொள்கிறார்.
ஶ்ரீ லாமக் மண்டபத்தில் காலை மணி 10.45க்குக் குவாமுட் மற்றும் சுகாவ் சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலுடன் தேர்தல் நிர்வகிப்பு அதிகாரி யூசேரி இஸ்மாயில் யூசோஃப் அவ்வறிவிப்பைச் செய்தார்.
சபா மக்கள் கூட்டணி ஜி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்த ஜோஹைனிசம்ஷா ஜோஹரி இம்பியன் கட்சி சபாவின் சலாஹுடின் @சலாஹுடின் அனோய் வாரிசான் கட்சியின் முகமது சைஃபுலா லோக்மான் பெரிக்காத்தான் நேஷனல் கட்சியைச் சேர்ந்த மஸ்லின் மடலி மற்றும் சுயேட்சை வேட்பாளர் முஹமட் இஸ்மாயில் அயூப் ஆகியோருடன் புங் மொக்தார் போட்டியிடுகின்றார்.
கினபத்தாங்கன் நாடாளுமன்றத்தின் கீழ் உள்ள அந்த மூன்று சட்டமன்ற தொகுதிகளில் 21 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த முறை நடைபெற்ற மாநிலத் தேர்தலில் புங் மொக்தார் தம்மை எதிர்த்து போட்டியிட்ட வாரிசான் கட்சியைச் சேர்ந்த முஹமட் இஸ்மாயில் அயூப்பை 661 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.
குவாமுட் சட்டமன்றத் தொகுதியில் எட்டு முனை போட்டியும் சுகாவில் ஏழு முனை போட்டியும் நிலவுகின்றது.
மேலும், சபாவின் இரு முன்னாள் முதல் அமைச்சர்கள் இம்முறை போட்டியிடுவதும் 17வது மாநிலத் தேர்தலின் கவனத்தை இன்னும் ஈர்த்துள்ளது.
வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ ஷாபியி அப்டால் செனாலாங் தொகுதியைத் தற்காத்துகொள்ள போட்டியிடும் வேளையில் அங்கு அவர் நான்குமுனை போட்டியியை எதிர்கொள்கிறார்.
அதேபோல சபாவின் 9வது முதல் அமைச்சராக இருந்த டத்தோ ஸ்ரீ டாக்டர் சாலே சையத் கெருவாக் தமது உசுகான் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள இன்று அதன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)