சிலாங்கூர், 14 நவம்பர் (பெர்னாமா) -- கிள்ளான், புக்கிட் திங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவ இதுவரை இளைஞர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் உறுதிப்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 19 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசேலி கஹார் கூறினார்.
"கைது செய்யப்பட்டவர்கள் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 17-ஆம் தேதி அவர்களின் தடுப்பு காவல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது" என்றார் டத்தோ ஷசேலி கஹார்.
இன்று வழக்குகள் சம்பந்தப்பட்ட போதைப்பொருளை அழிக்கும் நடவடிக்கையை நிறைவேற்றியப் பிறகு, செய்தியாளர்களிடம் டத்தோ ஷசேலி அதனை கூறினார்.
குண்டர் கும்பலை உள்ளடக்கி சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டுகள் எழுந்துள்ளதால் தற்போது அதை மட்டும் அடிப்படையாக கொண்டிருக்காமல் பல்வேறு அம்சங்களில் தங்கள் தரப்பு விசாரணையை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
"நான் முன்னதாக குறிப்பிட்டது போல, பல்வேறு அம்சங்களைப் பார்க்க வேண்டும். இறந்தவரின் பின்னனியின் அடிப்படையில்." என்றார் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர்.
2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டம் SOSMA-வின் தேடப்பட்டு வரும் பலியான 34 வயதுடய அந்த ஆடவருக்கு இதர பல குற்றப் பதிவுகளும் இருப்பதாக முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை டத்தோ ஷசேலி கூறியிருந்தார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)