கோத்தா கினபாலு, 17 நவம்பர் (பெர்னாமா) -- 17-வது சபா மாநிலத் தேர்தலில் N-62, சிலாம் சட்டமன்றத் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து வேட்பாளராக களமிறங்கிய அப்துல் ஹலிம் சிடேக் குலாம் ஹசான் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டார்.
விலகிக் கொள்வதாக அப்துல் ஹலிம் அறிவித்ததை தமது தரப்பு கருத்தில் கொள்வதோடு, அதற்கு மதிப்பளிப்பதாகவும் சபா மாநில கெஅடிலான் தலைமைத்துவ மன்றத் தலைவர் டத்தோ முஸ்தஃபா சக்முட் தெரிவித்தார்.
இது அப்துல் ஹலிமின் தனிப்பட்ட முடிவு என்றும் எந்த வெளித் தரப்பினரும் வழங்கிய அழுத்தத்தின் பேரில் அவர் இம்முடிவை எடுக்கவில்லை எனவும் டத்தோ முஸ்தஃபா தெளிவுப்படுத்தினார்.
பல்வேறு பரிசீலனைகளைக் கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அவர் எடுத்திருக்கும் இம்முடிவை தமது தரப்பு மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சபாவின் அரசியல் நிலைத்தன்மை பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதில் அம்மாநிலத்தை தோழமை உணர்வோடு அணுகுவதுடன், அரசியல் ஒத்துழைப்பின் ஒருமைப்பாட்டிற்கும் கெஅடிலான் கட்சி எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாக முஸ்தஃபா கூறினார்.
போட்டியிலிருந்து விலகினாலும் சிலாம் மற்றும் லஹட் டத்து மக்களுக்கு அப்துல் ஹலிம் தமது சேவையைத் தொடர்ந்து வழங்குவதற்கான உறுதிப்பாட்டையும் கொண்டிருப்பதாக டத்தோ முஸ்தஃபா தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)