ஜாலான் பார்லிமன், 18 நவம்பர் (பெர்னாமா) -- வலுவடைந்து வரும் ரிங்கிட்டின் வழி பயனீட்டாளர்கள் நன்மை அடைவதை உறுதி செய்யும் பொருட்டு உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் வழி அரசாங்கம் அமலாக்கத்தைத் தீவிரப்படுத்தும்.
வலுவான ரிங்கிட்டின் மதிப்பு பல்வேறு துறைகளில், குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட கால்நடை தீவனத்தை அதிகம் சார்ந்திருக்கும் கால்நடைத் துறையில் செலவுகளைக் குறைக்க உதவும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
விநியோகச் சங்கிலி மற்றும் பயனீட்டாளர்களின் செலவினங்கள் ஆகியவற்றில் நேர்மறை தாக்கங்களை அளிக்கும் வகையில் வலுவான ரிங்கிட்டின் மதிப்பு வழி நன்மைகளை உறுதி செய்வதற்காக அரசாங்கம் மேலும் இரண்டு பயனுள்ள நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விவரித்தார்.
''எனவே ஒன்று அமலாக்கம். இரண்டாவது ரஹ்மா விற்பனை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது. ஒப்பீட்டளவில் மலிவான விலையை வழங்கும் கடைகள் அல்லது கடைகளின் கண்ணோட்டத்தை வழங்குவதாகும். அது மக்கள் மீதான சுமையைக் குறைக்கும். இறக்குமதிகள் குறைந்தால் அந்த வீழ்ச்சி பெரியது, சிறிய வீழ்ச்சி அல்ல, ஆனால் பொருள்களின் விலை அதற்கேற்ப குறையவில்லை'', என்றார் அவர்.
ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்ததற்கான முக்கிய காரணம் மற்றும் அது பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் எவ்வாறு பயனளிக்கிறது தொடர்பாக தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம்மி புவா வீ சே எழுப்பிய கேள்விக்கு அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)