கோலாலம்பூர், 18 நவம்பர் (பெர்னாமா) -- மொத்தம் 24 கோடியே 98 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு திட்டங்களால் சுமார் 12,645 இந்திய தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர்.
2024-ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு மேற்கொண்ட திட்டங்கள் வழி அவை அடையப்பட்டன.
SPUMI எனப்படும் இந்திய தொழில்முனைவோர் கடனுதவி திட்டம், இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கான PENN திட்டம், BRIEF-i எனப்படும் BANK RAKYAT-டின் இந்திய தொழில்முனைவோர் கடனுதவி திட்டம், SME வங்கியின் 'வணிகம்' எனும் திட்டம் ஆகியவை இந்திய தொழில்முனைவோருக்கு உதவ அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக அதன் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
2030-ஆம் ஆண்டு தேசிய தொழில்முனைவோர் கொள்கை மற்றும் மலேசிய மடானியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, சீரான மற்றும் நிலையான சமூக-பொருளாதார வளர்ச்சியை வலியுறுத்தும் வகையில் இந்திய தொழில்முனைவோர் உட்பட நாடு தழுவிய தொழில்முனைவோரை மேம்படுத்துவதில் அமைச்சு உறுதியாக உள்ளதாக அவர் விவரித்தார்.
''தெக்குன் கீழ் ஒரு உதாரணம் சொல்ல முடியும். தெக்குனின் கீழ் ஒரு விண்ணப்பத்திற்கு அடையாள அட்டையின் நகல், நிறுவனப் பதிவின் நகல், வளாகத்தின் மூன்று புகைப்படங்கள் மற்றும் வங்கியின் அதிகாரப்பூர்வ மூன்று மாத அறிக்கைகளின் நகல்கள் மட்டுமே தேவைப்படும். 21 நாட்கள் வரை எடுக்கும் பல வங்கிகளுடன் ஒப்பிடும்போது, ஒப்புதல் காலம் ஏழு நாட்கள் மட்டுமே தேவைப்படும் வகையில் ஒப்புதல் செயல்முறையையும் நாங்கள் மேம்படுத்தியுள்ளோம்,'' என்றார் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்.
SPUMI, PENN, BRIEF-i மற்றும் 'வணிகம்' உள்ளிட்ட இந்திய தொழில்முனைவோருக்கான திட்டங்கள் குறித்து சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் எழுப்பிய கேள்விக்கு ரமணன் அவ்வாறு பதிலளித்தார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)