பொது

சட்டவிரோதக் குடியேறிகளைத் தங்க வைப்பதற்கான தடுப்பு முகாம்கள் போதுமானதாக உள்ளன

18/11/2025 05:38 PM

கோலாலம்பூர், 18 நவம்பர் (பெர்னாமா) -- நாடு முழுவதிலும், அமலாக்க நடவடிக்கைகளில் கைது செய்யப்படும் சட்டவிரோத குடியேறிகளைத் தங்க வைப்பதற்கு, மலேசியக் குடிநுழைவுத்துறை, ஜி.ஐ.எம்-இன் தடுப்பு முகாம்கள் தற்போது போதுமானதாக உள்ளன.

21,000 பேருக்கும் மேல் தங்க வைப்பதற்கான இடவசதி கொண்ட 21 தடுப்பு முகாம்களை ஜி.ஐ.எம் நிர்வகித்து வருவதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் தெரிவித்தார்.

தற்போது 500 காலியிடங்கள் இருப்பதோடு, இடம் எப்போதும் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தினசரி வெளியேற்றும் செயல்முறை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

''ஒவ்வொரு நாளும் வெளியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 200-300 (பேர்). எனவே, ஒவ்வொரு நாளும் (வெளியேற்றங்கள்) இருக்கும். ஒவ்வொரு நாளும் கைது நடவடிக்கைகள் இருக்கும். தரவுகளின் அடிப்படையில் இது ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆனால், அமலாக்க நடவடிக்கை நிறுத்தப்படாமல் இருக்க எங்கள் தடுப்பு முகாம் எப்போதும் ஆற்றலைக் கொண்டிருப்பதை உறுதி செய்வோம்,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச அளவில் ஜி.ஐ.எம்-இன் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே, ஒவ்வொர் ஆண்டும் கொண்டாடப்படும் ஜி.ஐ.எம்-ன் இந்த தீபாவளி நிகழ்ச்சியில் பல்லின மக்களும் கலந்து கொண்டு தங்களின் படைப்புகளை வழங்குவது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும் என்று குடிநுழைவுத்துறை அதிகாரி பாலகணேஷ் தெரிவித்தார்.

''ஒவ்வொர் ஆண்டும் பல்லின மக்கள் கலந்து கொண்டு தங்களின் வற்றாத ஆதரவை வழங்கி வருகின்றனர். குறிப்பாக மலாய் இனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிரமம் பாராது தங்களின் நேரத்தை செலவிட்டு நடன நிகழ்ச்சிகளுக்கான பயிற்சியை எடுத்து தங்களின் படைப்பு வழங்குவார்கள்,'' என்று அவர் கூறினார்.

கடந்த காலங்களைக் காட்டிலும், இம்முறை நிகழ்ச்சி மேலும் சிறப்பாக கொண்டாட்டப்பட்டதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பே காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)