பெட்டாலிங் ஜெயா, 19 நவம்பர் (பெர்னாமா) -- மலேசியா தற்போது மிகப்பெரிய மற்றும் வேகமான மக்கள் தொகை மாற்றங்களை எதிர்கொண்டு வருவதால், அதற்கு மேலும் திட்டமிடப்பட்ட மற்றும் தரவு சார்ந்த நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
கருவுறுதல் விகிதம் குறைவது, முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பது, சுமார் 80 விழுக்காடு நகரமயமாக்கலை எட்டியிருப்பது, குடும்ப அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் உலகளாவிய ஆள்பல இயக்கம் போன்ற காரணங்களால் இந்த சவால் எதிர்கொள்ளப்படுவதாக மகளிர் குடும்பம் மற்றும் சமூகநல மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்திருக்கின்றார்.
இந்த சவால்களை எதிர்கொள்வதற்காக, பொது சேவை மற்றும் தனியார் துறையில் தரவு அடிப்படையிலான பரிந்துரைகளை உருவாக்கவும், சான்றுகள் சார்ந்த கொள்கையின் கலாச்சாரத்தை வலுப்படுத்தவும் அதன் நிபுணர்களுக்கு டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி அழைப்பு விடுத்துள்ளார்.
அதோடு, நாட்டின் கருவுறுதல் விகிதம் 2024 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
"மக்கள் தொகை குறைவது உண்மையில் எங்களுக்கு வருத்தமளிக்கிறது. ஏனென்றால், நம்பிக்கையுடன் அது அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதால், குறைந்தபட்சம் மக்கள் தொகை அதிகரிப்பை உறுதி செய்வது எங்கள் பொறுப்பாகும். ஆனால், இப்போது நாம் உண்மையில் குறைந்து வருகிறோம். இதில் தலையிட்டு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சிக்கிறோம்," என டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி கூறினார்.
ஏதேனும் தலையீடு இல்லாமல் இருந்தால், இந்த நிலை நாட்டின் மக்கள் தொகை அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதில் தொழிலாளர் தேவைகள், குடும்ப நலன், முதியோர் பராமரிப்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)