உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை உக்ரேன் ஏற்க வேண்டும்

22/11/2025 03:47 PM

வாஷிங்டன் டி.சி, 22 நவம்பர் (பெர்னாமா) -- கைப்பற்றப்பட்ட சில பகுதிகளை ஒப்படைப்பதன் வழி, ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் தமது திட்டத்தை, ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உக்ரேனை வலியுறுத்தியுள்ளார்.

நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த போருக்கு முற்றுப் புள்ளி வைக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

''அமைதியைப் பெற நமக்கு ஒரு வழி இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். அவர் (வோலோடிமிர் செலன்ஸ்கி) அதை அங்கீகரிக்க வேண்டும். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எவ்வளவு பேர் - உங்களுக்குத் தெரியும். கடந்த மாதம், அவர்கள் 25,000 வீரர்களை இழந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இதுபோன்ற எதையும் நாங்கள் பார்த்ததில்லை. மேலும் அவ்விரு நாடுகளுக்கும் இடையில் வாரத்திற்குச் சராசரியாக 6,000 அல்லது 7,000 வீரர்கள் மடிகிறார்கள்,'' என்றார் அவர்.

நேற்று வெள்ளை மாளிகையில் நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி உடனான சந்திப்புக்கு பின்னர், டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார்.

நவம்பர் 27-ஆம் தேதிக்குள் தமது அமைதி திட்டத்தை உக்ரேன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கால அவகாசம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் அமைதி திட்டம் ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதால், அதனை ஏற்க முடியாது என்று உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று அறிவித்திருந்தார்.

--பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)