கோத்தா கினபாலு , 22 நவம்பர் (பெர்னாமா) -- பல ஆண்டுகளாக சபா எதிர்நோக்கி வரும் அடிப்படைப் பிரச்சனைகளை ஒரே தவணையில் தீர்வு காணும் உறுதிமொழி உட்பட ஆறு அம்சங்கள் கொண்ட தேர்தல் வாக்குறுதி அறிக்கையை அம்மாநில தேசிய முன்னணி வெளியிட்டுள்ளது.
RPS1 எனப்படும் ஒரே சபா மேம்பாட்டு திட்டம் வழியில் தேசிய முன்னணியின் ஆறு அம்சங்கள் கொண்ட தேர்தல் வாக்குறுதிகள் சிறப்பானவை என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
"இந்த முறை 17-வது சபா தேர்தலில் நாங்கள் பின்தங்கியவர்கள் என்று கருதப்பட்டாலும் தேசிய முன்னணி மீதான ஏக்கம் சபா மக்கள் மத்தியில் அதிகமாக இருப்பதை நாங்கள் உணர்கிறோம். ஆறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த வாக்குறுதிகளை சபா மாநில தேசிய முன்னணி செயல்படுத்தும் என்பது உறுதிமொழியாகும்," என்றார் அவர்.
சனிக்கிழமை கோத்தா கினபாலுவில் தேசிய முன்னணியின் தேர்தல் வாக்குறுதி வெளியீட்டு விழாவில் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி அவ்வாறு கூறினார்.
இத்தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தால், சபாவில் சாலை, நீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒரு தவணைக்குள் தீர்வு காணப்படுவதை கட்சி உறுதி செய்யும் என்று அம்னோவின் தலைவருமான அவர் கூறினார்.
17 சபா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணியை பிரதிநிதித்து 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே, MA63 எனப்படும் 1963-ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தம் முழுமையாக செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும் என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி உத்தரவாதம் அளித்துள்ளார்.
இத்தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தால் சபாவை மேம்படுத்தும் முயற்சிகளில் இதர கூட்டணிகளுடன் இணைந்து பணியாற்ற கட்சி தயாராக உள்ளது என்றும் டாக்டர் அஹ்மாட் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)