பொது

வாரிசான் உடனான போட்டி தேசிய முன்னணிக்குப் பெரும் சவால் இல்லை - சாஹிட்

06/01/2026 04:15 PM

புத்ராஜெயா, ஜனவரி 06 (பெர்னாமா) -- கினபதாஙான் நாடாளுமன்றம் மற்றும் லமாக் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் வாரிசான் கட்சியோடு நேரடி போட்டியை எதிர்கொண்டாலும் அது தேசிய முன்னணிக்குப் பெரும் சவாலாக அமையாது என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறுகின்றார்.

அவ்விரு தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் இடையே நிலவும் நல்லுறவின் அடிப்படையில் இந்த நம்பிக்கை அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கினபதாஙான் நாடாளுமன்ற தொகுதியில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சேவை தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்வதே தேசிய முன்னணியின் முதன்மை நோக்கமாகும்.

அதற்காக, மறைந்த டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடினுக்குப் பதிலாக அவரது மகன் முஹமட் நயிம் குர்னியாவன் மொக்தார் வேட்பாளராகக் களமிறப்பட்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

''ஏனென்றால் அவர்கள் மாநில சட்டமன்றத் தேர்தலை முடித்துவிட்டார்கள். நாடாளுமன்ற பதவிக்காலம் இன்னும் ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளது. எனவே மிகவும் கடுமையான ஒரு பிரச்சாரத்தை நடத்தத் தேவையில்லை என நான் நினைக்கிறேன். மேலும், நாங்கள் ஒருவருக்கொருவர் நன்கு அறிவோம் மற்றும் நட்புடன் உள்ளோம்'', என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி.

இன்று புத்ராஜெயாவில் புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் மாதாந்திரச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது டாக்டர் அஹ்மாட் அவ்வாறு கூறினார்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)