கோலாலம்பூர், 24 நவம்பர் (பெர்னாமா) -- கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் மிகப் பெரிய சக்தி என்று நிரூபித்திருப்போர் பட்டியலில் இணைந்திருக்கின்றார், பேராக், சுங்கை சிப்புட்டில் உள்ள ஹீவுட் தோட்டதைச் சேர்ந்த முனைவர் ஜெயபிரகாஷ் முரளிதரன்.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், கடந்த மாதம் 25-ஆம் தேதி வேதியியல் வளிமண்டல அறிவியல் துறையில் தமது முனைவர் பட்டப்படிப்பை நிறைவுச் செய்த முதல் மலேசியர் என்ற பெருமையோடு சமுதாயத்தின் கவனத்தையும் ஜெயபிரகாஷ் ஈர்த்திருக்கின்றார்.
தோட்டபுற வாழ்வில் வளர்ந்த நிலையில், வெளிநாடுகளில் சென்று படிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதில் எட்டா கனியாக இருந்ததாக முனைவர் ஜெயபிரகாஷ் கூறினார்.
கல்வியில் சிறந்து விளங்கினாலும், நிதி நெருக்கடியால் உயர்கல்விக்காக வெளிநாடு பயணம் சாத்தியமாகாது என்ற நிலையில், ஜோகூர் ஸ்கூடாயில் உள்ள யூ.தி.எம் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலாளர் துறையில் அவர் இளங்கலை பட்டதாரியானார்.
கல்வி கனவுக்கு உபகாரச் சம்பளம் கைக்கொடுக்க, இங்கிலாந்தின் ஸ்ட்ராத்க்லைடு பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் ஆய்வுகள் துறையில் தமது முதுகலைப் படிப்பை முடித்து, தற்போது முனைவர் பட்டப்படிப்பையும் நிறைவு செய்திருப்பதாக அவர் பெர்னாமா செய்திகளிடம் தெரிவித்தார்.
''என்னுடைய கிராமத்து வாழ்க்கை நிறைய சவால்களை ஏற்படுத்தியது. அதனால், எதுவும் சாத்தியமில்லை கல்வி ஒன்று தான் நமது சொத்து என்று என்னுடைய பெற்றோர் எப்பொழுதும் வலியுறுத்துவார்கள். எனவே, சிறந்த உபகாரச் சம்பளங்களுடன் உலகில் இருக்கும் பல்கலைக்கழங்களில் பயில வேண்டும் என்பதையே நான் இலக்காக கொண்டிருந்தேன்'', என்றார் அவர்.
அரசாங்கத்தின் உபகாரச் சம்பளமும், பொதுச் சேவை துறையின் பரிந்துரையும் இல்லையென்றால் தமது லட்சியம் கானல் நீராகியிருக்கும் என இன்று நிர்வாக மற்றும் அரசதந்திர அதிகாரியாக பணியாற்றும் 44 வயது முனைவர் ஜெயபிரகாஷ் கூறினார்.
இந்தோனேசியா சுமத்ரா தீவில் எரியும் உயிரியல் துகள்கள் நாட்டின் எல்லையைக் கடந்து எவ்வாறு நகர்கின்றன,
குறிப்பாக மலேசியாவின் தலைநகரத்தின் காற்றின் தரத்தை எவ்வாறு பாதிக்கின்றது ஆகியவற்றை ஆய்வின் மாதிரியாக கொண்டு தமது முனைவர் பட்டப்படிப்பை நிறைவுச் செய்ததாக அவர் விளக்கினார்.
அதோடு, அக்காலக்கட்டம் முழுவதும் தாம் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் முனைவர் ஜெயபிரகாஷ் பகிர்ந்து கொண்டார்.
''அறிவியல் ஆய்வில் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆசை. வாழ்க்கை சுலபமானதாகவும் அமையவில்லை. கோவிட்-19 காலக்கட்டத்தில் நடனமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவுகள் விதிக்கப்பட்ட காலக்கட்டத்தில் நான் இங்கிலாந்து சென்றேன். நாற்பது வயதில் பல புதிய அறிவியல் கருவிகள், ஆய்வுகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கினேன்'', என்றார் அவர்.
இதனிடையே, எத்தனை தடைகள் இருப்பினும், கல்வியை நிறுத்திவிடாமல் தொலைநோக்கு கனவுகளைக் கொண்டு முன்னேறும் போது தான் உண்மையான இலக்கை அடைய முடியும் என்று இளைஞர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
தற்போது, கல்வி பயணம் நிறைவடைந்திருக்கும் நிலையில், தாம் கற்ற அறிவியலை இனி பொது நலனுக்காக பயன்படுத்துவதை இலக்காக கொண்டிருப்பதாக முனைவர் ஜெயபிரகாஷ் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)