பொது

தேசிய அளவிலான  எந்திரவியல் போட்டி; 200 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

23/11/2025 06:39 PM

கோலாலம்பூர், நவம்பர் 23 (பெர்னாமா) -- ROBOTIC SYSTEM எனப்படும் எந்திரனியல், CODING எனப்படும் குறியீட்டு முறை, PROGRAMMING எனப்படும் நிரலாக்கம் ஆகிய முறைகளுடன், எந்திரவியல் தொடர்பான அனைத்து அணுகுமுறைகளையும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலகுவாகக் கற்பிக்கும் முதல் முயற்சியில் வெற்றிகண்டுள்ளது மலேசிய மக்கள் நல சேவை கழகம்.

அக்கழகத்தின் ஏற்பாட்டில் 4,5,6-ஆம் ஆண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களை உட்படுத்தி நேற்று நடைபெற்ற எந்திரவியல் போட்டியில், ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த 200 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து தங்களின் நிரலாக்கத் திறனை சிறப்பாக வெளிப்படுத்தினர். 

4,5,6-ஆம் ஆண்டு மாணவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள RBT எனப்படும் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப பாடங்களின் அடிப்படையில் இப்போட்டி நடத்தப்பட்டதாக மலேசிய மக்கள் நல சேவை கழகத்தின் தலைவர் கந்தன் சாமிநாதன் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு இப்போட்டியை ஏற்பாடு செய்வதற்கு முன்னதாக நாடு தழுவிய அளவில் அனைத்து தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களையும் உட்படுத்தி இவ்வாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு பயிற்சி நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

"12 வாரங்களாக நடத்தப்பட்ட அப்பயிற்சியில் தாங்கள் கற்றுக் கொண்ட தகவல்களைக் கொண்டு மாணவர்களை ஆசிரியர்கள் இப்போட்டிக்குத் தயார்ப்படுத்தியுள்ளனர். இங்கு வந்து வழங்கப்படும் கருபொருள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தியே மாணவர்கள் தங்களின் நிரலாக்கத்தை உருவாக்க வேண்டும் என்பது போட்டியின் விதிமுறையாக இருந்தாலும் மாணவர்கள் அதை சவாலாக ஏற்று தங்களின் சிறந்த திறனாற்றலை வெளிப்படுத்தினர்," என்று அவர் கூறினார்.

சொந்த நிதி மற்றும் நல்லுள்ளங்கள் வழங்கிய நன்கொடையின் மூலமாக இவ்வாண்டு மாநிலம் தொடங்கி தேசிய அளவில் வெற்றிகரமாக இப்போட்டியை நடத்த முடிந்ததாகக் கூறிய கந்தன், வரும் ஆண்டுகளில் அரசாங்கத்தின் துணையுடன் இன்னும் அதிகமான மாணவர்களைக் கொண்டு நடத்தவும் எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இதனிடையே, இப்போட்டி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர் முனைவர் கணேசன் முருகேசு தெரிவித்தார்.

"முதல்கட்டமாக குறியீட்டி முறை வழியில் மாணவர்கள் எந்திரவியல் குறித்த புரிதலை அடைய வேண்டும். அதைத் தொடர்ந்து நிரலாக்கத்தை அவர்கள் படைக்க வேண்டும். இவை இரண்டிற்குப் பின்னரே மாணவர்களுக்கு கேள்வி, பதில் அங்கம் இடம்பெறும். இதில் ஆசிரியர்களுக்கு நிச்சயம் பங்கேற்க வேண்டும்," என்றார் அவர்.

அதில் வழங்கப்பட்டுள்ள 20 கேள்விகளில் பத்து கேள்விகள் ஆசிரியர்களுக்கும் இதர பத்து கேள்விகள் மாணவர்களுக்கும் வழங்கப்படும்.

இவை அனைத்தையும் ஒன்றிணைத்து திரட்டப்படும் புள்ளிகளை மையப்படுத்தியே வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவதாக முனைவர் கணேசன் முருகேசு விவரித்தார். 

கோலாலம்பூரில் அமைந்துள்ள ADTEC JTM தொழில்நுட்பக் கல்லூரியில்  நடைபெற்ற இப்போட்டியில் முதல் பரிசை பினாங்கு சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளியும், இரண்டாவது பரிசை ஜோகூர் மாசாய், பண்டார் ஶ்ரீ ஆலாம் தமிழ்ப்பள்ளியும், மூன்றாவது பரிசை மலாக்காவில் உள்ள பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளியும் வென்றன.

வெற்றி பெற்ற இப்பள்ளிகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட  20 தமிழ்ப்பள்ளிகளுக்குக் காசோலையுடன் தொழில்நுட்பச் சாதனங்களும் வழங்கப்பட்டன. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)