இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹெஸ்பொல்லா அமைப்பின் மூத்த உறுப்பினர் உயிரிழந்தார்

24/11/2025 07:27 PM

லெபனான், 24 நவம்பர் (பெர்னாமா) -- லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹெஸ்பொல்லா அமைப்பின் மூத்த உறுப்பினர் ஹைத்தம் அலி தப்தபா உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரைக் குறிவைத்து, நேற்று இஸ்ரேல் மேற்கொண்ட இத்தாக்குதலில், அப்பகுதியில் உள்ள வாகனங்களும் கட்டிடங்களும் பெருமளவில் சேதமடைந்ததாக, இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்தாண்டு நவம்பர் மாதம் இரு நாடுகளுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததை மீறி இஸ்ரேல் லெபனானில் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டிடங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

இந்த தாக்குதலில் ஐவர் மாண்டதோடு, 28 பேர் காயமடைந்ததாக லெபனானின் சுகாதார அமைச்சு கூறியது.

இதனிடையே, தாக்குதல் நடந்த பின்னர், ஹிஸ்புல்லா அதன் படைபலத்தை மீண்டும் வலுப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று இஸ்ரேலியப் பிரதமர் Benjamin Netanyahu அறிவித்திருக்கின்றார்.

அவ்வமைப்பு ஆயுதங்களைக் கைவிடுவதை லெபனான் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

அலி தப்தபாயைக் குறிவைத்து, பல மாதங்களில் லெபனானில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவென்று கூறப்படும் நிலையில், அதன் உண்மையான தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும், ஹிஸ்புல்லாவின் மற்றுமொரு மூத்த அதிகாரி மஹ்மூத் குமதி-யும் குறிவைக்கப்பட்டதாக நெதன்யாகு கூறியுள்ளார்.

பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)