பொது

இழப்புகளை எதிர்நோக்கும் 12 நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்கள்

26/11/2025 06:09 PM

ஜாலான் பார்லிமன், நவம்பர் 26 (பெர்னாமா) -- குறைந்த போக்குவரத்து மற்றும் பராமரிப்பு செலவுகளை ஈடுகட்ட போதுமான டோல் கட்டண வசூல் இல்லாத காரணத்தால் நாட்டில் மொத்தம் 12 நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்கள் இழப்புகளைப் பதிவு செய்துள்ளன.

குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதி அல்லது நிலையான போக்குவரத்து வளர்ச்சியைக் கொண்டிராத நெடுஞ்சாலைகள் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக 2024ஆம் ஆண்டின் இறுதி வரையிலான நிதித் தரவுகள் காட்டுவதாகப் பொதுப்பணி துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மட் மஸ்லான் தெரிவித்தார்.

''நஷ்டம் அடைந்தவை 12 நிறுவனங்கள். எனவே, இங்கே ஒரு நெடுஞ்சாலை அங்கே ஒரு நெடுஞ்சாலையை முன்மொழிய விரும்புவர்கள் உண்மையில் கணக்கீடு செய்யுங்கள். ஏனென்றால் போதுமான போக்குவரத்து இல்லையென்றால் நீங்கள் லாபம் ஈட்ட முடியுமா என்று உங்களுக்குத் தெரியாது. உதாரணமாக, எல்.பி.3. பலர் எல்.பி நெடுஞ்சாலையைச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்த நெடுஞ்சாலை லாபகரமானதா? கோலா திரெங்கானுவில் இருந்து கோத்தா பாரு,'' என்றார் டத்தோ ஶ்ரீ அஹ்மட் மஸ்லான்.

தமன்சாரா–ஷா ஆலம் (DASH), கெமுனிங்–ஷா ஆலம் (LKSA), செனாய்–டேசாரு எக்ஸ்பிரஸ்வே (SDE), செத்தியாவங்சா–பந்தாய் (SUKE), ஸ்மார்ட் துண்ணேல், மாஜு எக்ஸ்பிரஸ்வே (MEX), வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்வே (WCE) உட்பட கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மேலும் சில நெடுஞ்சாலைகள் லாபத்தை ஈட்டவில்லை என்று பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

பிளஸ், என்.பி.இ, கேசாஸ், ஜி.சி.இ, டியூக், லெட்டர், சிரம்பான்–போர்ட்டிக்சன் நெடுஞ்சாலை, கிராண்ட் சகா, பினாங்கு முதல் மற்றும் இரண்டாவது பாலம் ஆகிய நெடுஞ்சாலைகளே லாபத்தைப் பதிவு செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)