சிறப்புச் செய்தி

உணவகங்களில் ஆள்பலம் பற்றாக்குறை இன்னும் சவாலாக உள்ளது - பிரெஸ்மா

26/11/2025 08:59 PM

கோலாலம்பூர், நவம்பர் 26 (பெர்னாமா) --  உணவகத் துறையில் நீடித்து வரும் பணியாளர் பற்றாக்குறை பிரச்சனை, இன்னும் சவால்மிக்க ஒன்றாக இருந்து வருகின்றது.

இப்பிரச்சனையைக் களைய அரசாங்கம் பல உதவிகளைச் செய்திருந்தாலும், மனிதவள தேவைகள் இன்னும் அதிகமாக இருப்பதாக PRESMA எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ முஹமட் மொசின் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

''அரசாங்கம் நமக்கு ஆதரவாக இல்லை என்று அர்த்தம் இல்லை. நம்முடைய தேவைகள் அவ்வாறு உள்ளன. அதனால், இந்த தேவைகளை நாங்கள் அரசாங்கத்திடம் பல முறை முன் வைத்துவிட்டோம். ஆனால், அரசாங்கத்திற்கும் சில காரணங்கள் இருக்கும். அதனால், ஏற்கனவே, பிரெஸ்மா மூலமாக முயற்சி செய்து இந்த CHECK OUT MEMO மூலமாக மாற்றீடு (GANTIAN) வழங்குவதற்கு விண்ணப்பித்திருந்தோம். அதே போன்று, அரசாங்கம் அனுமதியும் வழங்கியது. அதாவது டிசம்பர் 31ஆம் தேதி வரை. எனினும், அதில் சில சிக்கல்கள் இருப்பதால் அனுமதியை வாங்குவதற்கு உறுப்பினர்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்,'' என்றார் அவர்.

இதுபோன்ற சிக்கல்களைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் தகுந்த நடவடிக்கையை எடுக்கும் என்று பெரிதும் நம்புவதாக டத்தோ முஹமட் மொசின் அப்துல் ரசாக் கூறினார்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற Nasi Kandaq Fest 3.0 நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே, 2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு இந்நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முஹமட் மொசின் தெரிவித்தார்.

''மலேசியாவை பொறுத்தவரை இங்கு 'உணவு சொர்க்கம்' என்று சொல்வார்கள். அனைவரும் இந்த மாதிரி உணவுகளை எதிர்பார்க்கின்றனர். சீனாவைச் சேர்ந்தவர்கள் காரம் அதிகம் உட்கொள்ளமாட்டார்கள் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால், அவர்கள்தான் அதிகம் வருகின்றனர். ஆகையால், இது ஒரு வாய்ப்பு.,'' என்றார் அவர்.

இந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர்  29, 30ஆம் தேதிகளில் கோலாலம்பூர், டத்தும் ஜெலாத்தே விற்பனை மையத்தில் காலை பத்து மணி முதல் இரவு பத்து மணி வரை நடைபெறும்

பிற்பகல் 3.33 மணிக்கு நாசி கண்டாரை வாங்கும் முதல் 333 பேருக்கு, அந்த உணவு தலா மூன்று ரிங்கிட்டிற்கு விற்கப்படும்.

நாட்டின் பிரபலமான ஒன்பது நாசி கண்டார் உணவகங்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்கு, பத்தாயிரம் பேர் வருகைப் புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)