புக்கிட் மெர்தாஜாம், நவம்பர் 26 (பெர்னாமா) -- கடந்த மாதம் கம்புங் ஜூரு பல்ளியில் பெண் ஒருவரையும் அவரின் குழந்தையையும் கொலை செய்த இரண்டு குற்றங்களுக்காக நேபாள ஆடவர் ஒருவர் இன்று புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
மாஜிஸ்திரேட் நூருல் ரஷிடஹ் முஹமட் அகிட் முன்னிலையில் தம்மீதான குற்றச்சாட்டுகள் இந்தி மொழியில் வாசிக்கப்பட்டபோது 35 வயதுடைய தினேஷ் குமார் மண்டல் அதை புரிந்ததாகத் தலையசைத்தார்.
எனினும் இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் அவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
முதல் குற்றச்சாட்டின்படி குற்றஞ்சாட்டப்பட்ட தினேஷ் குமார் புக்கிட் மெர்தாஜாம் கம்புங் ஜூரு பள்ளியில் உள்ள வீடொன்றில் அக்டோபர் 18ஆம் தேதி நண்பகல் 12.30 மணி முதல் இரவு 7.30 மணிக்குள் 51 வயதான சரியா சே ஹின் என்பவரைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது
அதைத் தொடர்ந்து, அப்பெண்ணின் பதினொன்று வயது மகளான நூர் அஃப்ரினா அலிஷா அப்துல் ரஹீம் என்பவரை அதே இடத்திலும் நேரத்திலும் கொலை செய்ததாக அவர்மீது இரண்டாவது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
குற்றம் நிரூபனமானால் மரண தண்டனை அல்லது 30 லிருந்து 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302இன் கீழ் அவ்விரு குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன.
அச்சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் 12 பிரம்படிகளும் அவருக்கு விதிக்கப்படும்.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எந்தவொரு ஜாமினும் வழங்கப்படாத நிலையில் இவ்வழக்கு ஜனவரி 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)