பொது

சபாவில் அரசியல் நிலைத்தன்மை உருவாக்காவே கூட்டு ஆட்சி - சாஹிட்

03/12/2025 04:26 PM

ஜாலான் பார்லிமன், 3 டிசம்பர் (பெர்னாமா) -- சபாவில் அரசியல் நிலைத்தன்மையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தேசிய முன்னணி, பி.என் மற்றும் சபா மக்கள் கூட்டணி, ஜி.ஆர்.எஸ் ஆகியவை, பிற அரசியல் கட்சிகளோடும் சுயேச்சையான மாநில சட்டமன்ற உறுப்பினர்களோடும் இணைந்து அம்மாநில அரசாங்கத்தை அமைத்துள்ளதாக பி.என் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹி ஹமிடி  தெளிவுப்படுத்தினார்.

17-வது சபா மாநிலத் தேர்தலில், ஜி.ஆர்.எஸ் -உடன் பி.என், ஒத்துழைப்பைக் கொண்டிருக்காவிட்டாலும், தேர்தலுக்குப் பிந்தைய நிலவரம் மற்றும் அரசியல் சூழ்நிலை அடிப்படையில் இம்முறை இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டதாக அவர் எடுத்துரைத்தார்.

''அதனால் அரசியல் நிலைத்தன்மையை உருவாக்கும் ஆர்வத்தின் பேரில் பிஎன் ஜிஆர் எஸ் உடன் இணைந்து ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை அமைக்க தொடங்குவதற்கு, பிற கட்சிகளும் இணைவதற்கு ஒப்புக்கொண்டுள்ளன,'' என டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹி ஹமிடி கூறினார்.

புதிய சபா மாநில அமைச்சரவை உறுப்பினர்கள் அமைப்பதில் 12 ஜி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுவது தொடர்பில், டாக்டர் அஹ்மட் சாஹி செய்தியாளர்களிடம் அவ்வாறு கருத்துரைத்தார்.

தேவை ஏற்படும்போது, கூட்டரசு நிலையிலும் ஒருமைப்பாட்டு அரசாங்கம் அமைக்கப்படும் என்று கூறிய அவர், இது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஓர் அரசியல் யதார்த்தம் என்பதையும் நினைவுப்படுத்தினார்,

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)