ரவல்பிண்டி, டிசம்பர் 03 (பெர்னாமா) -- பாகிஸ்தான் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆரோக்கியமாக இருந்தாலும் அவர் தனிமை மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொண்டிருப்பதாக அவரது சகோதரி கூறியுள்ளார்.
பல வாரங்களாகக் குடும்பத்தாரைச் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகளின் கண்காணிப்புடன் நடைபெற்ற அரிதான சந்திப்புக்குப் பின்னரே இது தமக்குத் தெரிய வந்ததாக இம்ரான் கானின் மூன்று சகோதரிகளில் ஒருவரான உஸ்ம காணும் தெரிவித்திருக்கின்றார்.
அடியாலா சிறையில் உள்ள இம்ரான் கானை சந்திப்பதற்கு அவரின் குடும்ப உறுப்பினர்களில் உஸ்ம காணுமிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இம்ரான் கானின் இந்நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் - பிடிஐ கட்சியின் ஆதரவாளர்கள் சிறைச்சாலைக்கு வெளியே கூடினர்.
சிறையில் இருக்கும் இம்ரான் கான் சீரான உடல்நிலையில் இருந்தாலும் குடும்பத்தினருடனோ ஆலோசகர்களுடனோ எந்தத் தொடர்பும் இல்லாமல் இருப்பதால் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாக உஸ்ம தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவருடனான இந்தச் சந்திப்பு கடுமையான கண்காணிப்பில் கைப்பேசியின் பயன்பாடுகள் இல்லாமலேயே நடந்ததாகக் கூறிய அவர் மேலும் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்த 73 வயது இம்ரான் கான் 2023 ஆகஸ்ட் மாதம் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதிலிருந்து சிறையில் உள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)