பத்துமலை, 04 டிசம்பர் (பெர்னாமா) -- கார்த்திகை மாதத்தின் கிருத்திகை நட்சத்திரமும் பௌர்ணமியும் சேரும் நாளில் ஆண்டு தோறும் கார்த்திகைத் தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
மூன்று நாள்கள் கொண்டாட்டமான இவ்விழா, முறையே அப்ப கார்த்திகை, வட கார்த்திகை மற்றும் திருகார்த்திகை என்றழைக்கப்படுகிறது.
இத்திருநாளின் முதல் நாளான நேற்று, சிலாங்கூர், பத்துமலை ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கனமழையையும் பொருட்படுத்தாத மக்கள் பூஜைகளில் கலந்துகொண்டு, விளக்கேற்றி, இறைவனை வழிபட்டனர்.
கார்த்திகை தீபத்தின் முதல் நாள் ஏற்றப்படும் பரணி தீபம் முருகனுக்கே உரிய வழிபாட்டு தினமாக கருதப்படுகிறது.
மறுநாள் திருகார்த்திகை தீபம் சிவனுக்காக ஏற்றப்படுவது கோவில் கார்த்திகையாகவும் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகக் கடவுளை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரம் என்று நம்பப்படுகிறது.
அவ்வகையில், கார்த்திகேயனின் சந்நிதானத்தில் விளக்கேற்றி, இத்திருநாளை எவ்வித சிரமுமின்றி மக்கள் கொண்டாடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகம் செய்துள்ளதாக கோலாலம்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் கதிரேசன் கண்ணுசாமி தெரிவித்தார்.
''ஒவ்வோர் ஆண்டும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை நாங்கள் செய்வோம். இவ்வாண்டு கனமழையாக இருப்பதால் மக்கள் வருவார்களா என்ற கேள்வியும் உள்ளது. எனினும், எப்படியும் மக்கள் வந்துவிடுவார்கள் என்ற எண்ணமும் எங்களுக்கு இருக்கிறது,'' என்றார் அவர்.
அது போலவே, இரவு மணி 7.30-க்கு மேல் மழை சற்று குறையத் தொடங்கியதை அடுத்து மக்கள் வருகையும் ஆலயத்தை நிரம்பச் செய்தது.
மூலக் கடவுளான விநாயகர் பூஜையுடன் தொடங்கிய கார்த்திகை திருநாள் கொண்டாட்டம், பின்னர் ஆகம முறைப்படி அனைத்து பூறை புனஸ்காரங்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மேற்குகையின் ஒவ்வொரு மூலஸ்தானத்திலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பின்னர், உற்குகையை வலம் வந்த கதிர்வேலன் அங்கு குழுமிய மக்களுக்கு அருள் பாலித்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.
வலம் வந்த தமிழ்க் கடவுளின் எதிரே சொக்கப்பனை எரிக்கப்பட்டது, இக்கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது.
பத்துமலை திருத்தலத்தில் உள்ள ஆலயங்களைத் தவிர்த்து, அங்குள்ள 272 படிகளிலும் வழக்கம் போலவே கார்த்திகை தீபங்களை ஏற்றி மக்கள் தங்கள் வழிபாட்டை நிறைவுச் செய்த வேளையில் சிலர் பால்குடங்களையும் சுமந்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]