இந்தியா, 4 டிசம்பர் (பெர்னாமா) -- இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் குறைந்தது 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் அதன் பயணத் தடையால் குழப்பம் நிலவியுள்ளது.
மேலும், பத்துக்கும் மேற்பட்ட விமான பயணங்கள் தாமதமானதால், இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.
இந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி இண்டிகோவின் செயல்பாட்டில் ஏற்பட்ட பெரும் சரிவு காரணமாக, அது கடுமையான கண்காணிப்பு மற்றும் விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்ப கோளாறுகள், மோசமான வானிலை மற்றும் நவம்பரில் அமலுக்கு வந்த புதிய விமான பணிக்கால வரம்பு கட்டுப்பாடுகள் ஆகியவை இந்த சேவைச் சீர்குலைவுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன
இதனால் புதுடெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் பயணிகள், கடைசி நேர அட்டவணை மாற்றங்களால் நீண்ட வரிசைகளில் சிக்கித் தவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு, இண்டிகோ மன்னிப்பு கேட்டுள்ளதுடன், தங்கள் விமான அட்டவணையில் தேவையான மாற்றங்களை செய்ய தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)