பொது

இந்தோனேசியாவில் நடைபெற்ற புத்தாக்கப் போட்டியில் தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது

05/12/2025 02:50 PM

பாலி, 05 டிசம்பர் (பெர்னாமா) --  அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த புத்தாக்க திறன்களில் மாணவர்களை மேம்படுத்த தமிழ்ப்பள்ளிகள் அவ்வப்போது அது தொடர்பான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகின்றன.

அதில், அண்மையில் இந்தோனேசியா, பாலியில் நடைபெற்ற அனைத்துலக புத்தாக்க போட்டியில் ஜோகூரில் உள்ள தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சாதனைகள் படைத்து, பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமைச் சேர்த்துள்ளனர்.

நவம்பர் 12 முதல் 15-ஆம் தேதி வரை இந்தோனேசியா, பாலியில் நடைபெற்ற இப்போட்டியில் கனடா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவர் குழுக்கள் கலந்து கொண்டனர்.

அதில், பல சவால்களைக் கடந்து மலேசியாவைப் பிரதிநிதித்து தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 45 மாணவர்கள் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

''ஏழு ஆசிரியர்கள் இந்த போட்டியில் மாணவர்களை வழிநடத்தி சென்றனர். இந்த வேளையில், போட்டிக்கான அனைத்து செலவுகளையும் பூர்த்தி செய்ய உதவிய பெற்றோர்களுக்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும், நன்கொடையாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்'', என்றார் அவர்.

ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் நடுவர்களை வியக்கச் செய்யும் பல்வேறு புத்தாக்க கண்டுப்பிடிப்புகளை உருவாக்கி மாணவர்கள் தங்களின் படைப்புகளை வெளிப்படுத்தியதாக, ஆசிரியர்கள் சிலர் கூறினர்.

''துன் அமினா மாணவர்கள் பல புதிய கண்டுப்பிடிப்புகளைக் கண்டுப்பிடித்து நீதிபதிகளை வியப்பில் ஆழ்த்தினர். உதாரணத்திற்கு, பகடிவதை தடுப்பு கருவி, சூர்ய சக்தியில் இயங்கும் தபால் பெட்டி, அன்றாட கழிவுப் பொருள்களிலிருந்து உருவாக்கப்பட்ட கைத்தூய்மி, டுரியான் தொளிலிருந்து உருவாக்கப்பட்ட பொருள்கள் போன்றவற்றை மாணவர்கள் உருவாக்கினர்'', என்று பள்ளியின் அறிவியல் ஆசிரியர் வேலு துரைசாமி கூறினார்.

''உலக அரங்கில் மிக சிறப்பான வெற்றியை நமக்கு கொடுத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ஏழு ஆசிரியர்கள் தான். இந்த ஏழு ஆசிரியர்களும் மிகவும் கடுமையான உழைப்பு, அயராத முயற்சி மற்றும் புத்தாக்கத்தைக் கண்டுப்பிடிப்பதற்கான அதிக முயற்சிகள் செய்து மாணவர்களைச் சிறந்த முறையில் பயிற்சி கொடுத்து, வழிக்காட்டி அவர்களை உலக அரங்கில் மிளிர வைத்தது பெருமையான விஷயம்'', என்றார் புறப்பாட துணைத்தலைமையாசிரியர் ஜெயந்தி பாலகிருஷ்ணன்.

ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் முயற்சிகளைக் கையாண்டு, ஆறு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்று தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனைப் படைத்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)