பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 05 (பெர்னாமா) -- டிசம்பர் முதலாம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பேராக் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தொடர் சோதனை நடவடிக்கைகள் மூலம் ஒரு கோடியே 38 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய மெத்தஃபெத்தஃமின் மற்றும் கெத்தமின் வகையிலான போதைப்பொருள் விநியோகக் கும்பலின் நடவடிக்கையைப் போலீசார் வெற்றிகரமாக முறியடித்தனர்.
இச்சோதனை நடவடிக்கையில் ஒரு முன்னாள் போலீஸ் உறுப்பினர் உட்பட 26 லிருந்து 46 வயதுக்கு உட்பட ஆறு உள்நாட்டு ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாகப் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
போதைப் பொருள் விநியோக இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பேரங்காடி ஒன்றின் கீழ் மாடியில் இருக்கும் கார் நிறுத்தும் இடத்தில் முதலாவது சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அங்கிருந்த டொயோட்டா ஆல்பர்ட் வாகனம் ஒன்று மற்றும் இரு பெரோடுவா மைவி கார்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
''முதலில் 273 கிலோ எடையுள்ள மெதாஃபெதமைன் வகை போதைப்பொருள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 263 நெகிழி பொட்டலங்களைக் கொண்ட 17 சாக்குப்பைகளையும், 101 கிலோ எடையுள்ள கெட்டமைன் வகையிலான போதைப்பொருள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 98 நெகிழி பொட்டலங்களைக் கொண்ட 6 சாக்குப்பைகளையும் வெற்றிகரமாகக் கைப்பற்றப்பட்டது,'''' என்றார் டத்தோ ஹுசேன் ஒமார் கான்.
அதைத் தொடர்ந்து, பேராக், சிப்பாங் பூலாய் ஓய்வெடுக்கும் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனை நடவடிக்கையில் ஆறாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் செக்ஷன் 39Bஇன் கீழ் விசாரணைக்கு உதவ கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)