உலகம்

ரஷ்ய அதிபருக்கு இந்தியாவில் அதிகாரப்பூர்வ வரவேற்பு

05/12/2025 07:15 PM

புது டெல்லி, டிசம்பர் 05 (பெர்னாமா) -- இந்தியாவிற்கு இரு நாள்கள் அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

இன்று புதுடெல்லியில் புதினுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ வரவேற்பில், இந்திய அதிபர் திரௌபதி முர்முவும் கலந்து கொண்டார்.

இரு நாடுகளும் பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்கவும் பரிவர்த்தனைகளில் பல்வேறு பொருட்களை விரிவுபடுத்தும் முயற்சியாகவும் இப்பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரேன் மீது மாஸ்கோவின் படையெடுப்பு தொடர்பில் தலையிட வேண்டாம் என்று இந்தியாவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் நான்கு ஆண்டுகளில் இந்தியாவிற்கான புதினின் முதல் வருகையாக இது அமைந்துள்ளது.

ரஷ்ய எண்ணெய், ஏவுகணை அமைப்புகள் மற்றும் போர் விமானங்களின் விற்பனையை அதிகரிப்பதையும் எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைத் தவித்து வணிக தொடர்புகளை விரிவுபடுத்துவதையும் இப்பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதனிடையே ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை வாங்க வேண்டாம் என்று இந்தியா மீது கடுமையான அழுத்தத்தை வழங்கி வரும் அமெரிக்காவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

புது டெல்லியில் தரையிறங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு ஒளிபரப்பான இந்தியா டுடே செய்தியில் அவர் அவ்வாறு பேசினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)