புது டெல்லி, டிசம்பர் 06 (பெர்னாமா) -- இந்தியா புது டெல்லியில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்ட விமான பயணங்களை இண்டிகோ விமான நிறுவனம் ரத்து செய்ததைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் விமானப் போக்குவரத்து வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இதனால் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவுக்குச் சிறப்பு நிவாரண நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
விமானப் பயணப் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில் விமானிகள் விமானத்தை இயக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும் கடுமையான புதிய விதிமுறைகளை இந்திய அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதோடு இரவு நேரங்களில் விமானங்களை இயக்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளையும் அவர்கள் விதித்துள்ளனர்.
ஆனால் நவம்பர் முதலாம் தேதிக்குள் தனது நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான, காலக்கெடுவைச் சரியாக திட்டமிடத் தவறிவிட்டதை இண்டிகோ ஒப்புக்கொண்டது.
இதனால் இவ்வாரம் அதிகமான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
மும்பையிலிருந்து பெங்களூர் வரையிலான விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் பயணிகள் பயணத்தை மேற்கொள்ள முடியாததால் தங்களின் திட்டமிட்ட வேலைகளைச் செய்ய முடியாமல் போவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இண்டிகோவின் இந்த நெருக்கடி குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)