புது டெல்லி, டிசம்பர் 06 (பெர்னாமா) -- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவிற்குத் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை வழங்கவும் பல ஆண்டுகால உறவைக் கொண்ட இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் வர்த்தகம் மற்றும் தற்காப்புத் துறையில் உறவை விரிவுப்படுத்தவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
ரஷ்யாவின் ஆயுதங்களையும் கடல்வழி எண்ணெயையும் அதிகளவில் வாங்குவதில் உலகின் முன்னணி நாடான இந்தியா 2022ஆம் ஆண்டு உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னர் புது டெல்லிக்கு முதன்முறையாக இரண்டு நாள் அலுவல் பயணம் மேற்கொண்ட புடினிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு எதிராகத் தங்களின் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த அதிக வரிகளைக் குறைப்பதற்கான வர்த்தக ஒப்பந்தம் குறித்து புது டெல்லி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் வரிகள் மற்றும் தடைகளைத் தொடர்ந்து இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி இம்மாதத்தில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 2030ஆம் ஆண்டுக்குள் வர்த்தகத்தை 10 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்கும் முயற்சியில் இந்தியப் பொருட்களை அதிகமாக இறக்குமதி செய்ய விரும்புவதாக ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தடுக்க இந்தியா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிற்குத் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிசெய்ய மாஸ்கோ தயாராக இருப்பதாக புடின் பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)