உலகம்

டிட்வா புயல்; பலி எண்ணிக்கை 607-ஆக உயர்வு

06/12/2025 07:10 PM

கொழும்பு, நவம்பர் 06 (பெர்னாமா) --  இலங்கையில் டிட்வா புயலினால் ஏற்பட்ட கடுமையான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 214 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் நிர்வகிப்பு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இலங்கை முழுவதும் 586,464 குடும்பங்களைச் சேர்ந்த 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மையம் தெரிவித்துள்ளது.

4,164 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ள வேளையில் 67,505 வீடுகளின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக டிசம்பர் 9 முதல் 11ஆம் வரையில் நாட்டின் சில பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

மற்றொரு நிலவரத்தில், இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 883ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு சுமத்ரா, வடக்கு சுமத்ரா மற்றும் ஆச்சே முழுவதும் நூற்றுக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் காட்டுகின்றன.

நிலச்சரிவுகளால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளது, மீட்பு முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)