சிலாங்கூர், டிசம்பர் 07 (பெர்னாமா) -- சனிக்கிழமை இரவு சிலாங்கூர், செலாயாங் பாரு பகுதியில் நடத்தப்பட்டசோதனை நடவடிக்கையில் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் புரிந்த சந்தேகத்தின் பேரில் மொத்தம் 843 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்தோனேசியா, வங்காளதேசம், இந்தியா, மியன்மார், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 808 ஆண்களும் 35 பெண்களும் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
''எங்களுக்குப் பல புகார்கள் கிடைத்திருந்தன. இந்த விஷயம் எழுப்பப்பட்டபோது நாங்கள் முன்னதாக ஸ்ரீ மூடாவில் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தோம். அதனைத் தொடர்ந்து சிலாங்கூர் பாசார் போரோங் உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்த சோதனைகளை மேற்கொண்டனர். பொது மக்களின் பலதரப்பட்ட கருத்துகளைப் பெற்ற பின்னரே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தோம்." என்றார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி
நேற்றிரவு செலாயாங் பாருவில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் கலந்து கொண்ட பின்னர் அமிருடின் ஷாரி செய்தியாளர்களிடம் பேசினார்.
குடிநுழைவுத்துறையின் நடவடிக்கைப் பிரிவு துணை இயக்குநர் டத்தோ லோக்மான் எஃபெண்டி ராம்லி, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசேலி கஹார் மற்றும் சிலாங்கூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் கைருல் அமினுஸ் கமாருதீன் ஆகியோரும் இந்நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.
இதனிடையே, பல்வேறு பாதுகாப்பு மற்றும் அமலாக்க நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 358 அதிகாரிகளும் பணியாளர்களும் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)