ஷா ஆலம், 07 டிசம்பர் (பெர்னாமா) -- நாளைய உலகை உருவாக்கும் முக்கிய சக்தியாக ROBOTIC எனப்படும் எந்திரனியல் வளர்ச்சி கண்டு வருகின்றது.
தொழில்துறைகள், மருத்துவம், வேளாண்மை, கல்வி என எத்துறையிலும், அதில் எந்திரனியல் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் தேவை அதிகரித்து வருகின்றது.
அதனை நோக்கமாக கொண்டு 2025-ஆம் ஆண்டு அனைத்துலக அளவிலான SYSCORE இளம் புத்தாக கண்டுப்பிடிப்பாளர் போட்டியை, நேற்று SYSCORE கல்வி நிறுவனம் ஏற்று நடத்தியது.
கடந்த மூன்று ஆண்டுகளாக மாநில அளவில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த இப்போட்டி, இம்முறை சற்று மாறுப்பட்டு அனைத்துலக அளவில் நடத்தப்பட்டதாக, SYSCORE கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் காளிதாசன் கணேசா கூறினார்.
''இன்றைக்கு SYSCORE இளம் புத்தாக கண்டுப்பிடிப்பாளர் போட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக மாநில அளவில் நடைபெற்றது. இவ்வாண்டு அனைத்துலக அளவில் நாங்கள் நடத்தினோம். இதில் 2000 மாணவர்களில் இருந்து 1000 மாணவர்கள் தங்களின் படைப்புகளை அனுப்பினர். அதில் 380 சிறந்த படைப்புகளுக்கு நாங்கள் தங்க பதக்கங்கள் வழங்கினோம். அதேபோல 150 மாணவர்களுக்கு சிறப்பு விருதையும் வழங்கினோம்'', என்றார் அவர்.
நேற்று, ஷா ஆலம் மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு SYSCORE இளம் புத்தாக கண்டுப்பிடிப்பாளர் போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், அவர் அதனை கூறினார்.
இதனிடையே, அனைத்துலக ரீதியில் நடத்தப்பட்ட SYSCORE இளம் புத்தாக கண்டுப்பிடிப்பாளர் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு மாணவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இப்போட்டியில் சுமார் 1,000-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில், அவர்களில் சிறந்த 380 படைப்புகளுக்குத் தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)