உலகம்

நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இலங்கை அதிபர் கண்டி நகருக்கு வருகை

07/12/2025 06:46 PM

இலங்கை, டிசம்பர் 07 (பெர்னாமா) -- டித்வா புயலுக்குப் பிறகு நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இலங்கை அதிபர் அனுரகுமார திஸாநாயக்க சனிக்கிழமை கண்டி நகருக்கு வருகை புரிந்தார்.

அங்கே, இப்புயலினால் ஏற்பட்ட சேதம் மற்றும் அரசாங்கம் மேற்கொண்ட நிவாரண நடவடிக்கைகள் குறித்து அவர் பார்வையிட்டார்.

கடந்த வாரம் இலங்கையை தாக்கிய டித்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சுமார் 500 பேர் உயிரிழந்ததோடு அந்நாட்டு மக்கள் தொகையில் சுமார் 10 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் புதிதாக நிலம் வாங்கவோ வீட்டை மறுசீரமைப்பு மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் நிதி உதவி வழங்குகிறது.

மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 3,000 டாலர் நிவாரண உதவி வழங்கப்படும்.

 இந்தோனேசியாவில், சுமத்ரா தீவின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாதாங் தொரு  எனும் நகரில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

சுமத்ராவில் உள்ள மூன்று மாகாணங்களில் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 916 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் நிதியைத் திரட்ட தேசிய அவசரநிலையை அறிவிக்குமாறு இந்தோனேசிய அரசாங்கத்திடம் சுமத்ராவில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், நிலைமை சீரடைந்து வருவதாகவும் தற்போதைய நிவாரண நடவடிக்கைகள் போதுமானதாக இருப்பதாகவும் இவ்வார தொடக்கத்தில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கூறியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)