பொது

கோலாலம்பூரில் நடைபெற்ற அர்த்தமுள்ள 'பெரியபுராண விழா'

07/12/2025 05:44 PM

கோலாலம்பூர், டிசம்பர் 7 (பெர்னாமா) -- அறுபத்து மூன்று நாயன்மார்களின் புகழ்மிக்க வரலாற்றினை, பக்திச் சுவை மாறாமல், தேன்தமிழில் இயற்றப்பட்டிருப்பதே பெரிய புராணம் நூலின் தனிச்சிறப்பாகும்.

அப்பெரும் களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ள சமய பாக்களை இன்றைய தலைமுறையினரும் அர்த்தமுடன் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் பெரியபுராண விழா தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் இவ்வாண்டு மலேசிய சைவ நற்பணிக் கழகம், அவ்விழாவை இன்று பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக ஏற்று நடத்தியது.

அடியார்களின் வரலாற்றையும், அவர்கள் கடைப்பிடித்த தொண்டு நெறியையும், இக்காலத் தலைமுறையினரிடம் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, இப்பெரியபுராண விழா தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக, மலேசிய சைவ நற்பணிக் கழக தலைவர், முனைவர் தர்மலிங்கம் நடராஜன் தெரிவித்தார்.

''அதனால் இந்த பெரிய புராணத்தை நான் வெறும் கதையாக பார்த்து விடாமல் அதன் பின்னால் இருக்கும் சைவ சமய நெறிகளை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்து அதன்படி வாழந்து காட்ட வேண்டும்'' என்றார் முனைவர் தர்மலிங்கம் நடராஜன்.

14-ஆம் நூற்றாண்டில் உருவான பெரிய புரணாத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துகள், படித்து புரிந்து கொள்வதற்கு கடினமாக இருப்பது மறுப்பதற்கில்லை.

இருப்பினும், அதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப எளிய தமிழில் மாற்றி, அதை மக்கள் இலக்குவாக நினைவில் வைத்து கொள்ளும் வகையில் காணொளியாகவும், இயல், இசை, நாடகம் என்று முத்தமிழிலும் படைக்கப்பட்டிருந்தது பலரின் கவனத்தை ஈர்த்ததாக அவர் கூறினார்.

இதனிடையே, பெரிய புராணத்தை, உரை வடிவில் மட்டும் உணர்த்தாமல், திருமுறை ஓதுதல், கட்டுரைகள், பட்டிமன்றம் என்று பல்வேறு அம்சங்களில் விளக்கியிருந்த விதம் பாராட்டுக்குரியது என்று அவ்விழாவில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.

''இதிலிருந்து தமிழர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். பெரிய புராணம் நமக்கு கிடைத்துள்ள அரிய களஞ்சியம். நமது அன்றாட வாழ்வில் திருமுறையை ஓதி வழிப்பட வேண்டும். இப்பக்தி மக்கள் மத்தியில் நிச்சயமாக போய் சேர வேண்டும்'' என்றார் கீதா குழந்தின்.

தமிழ் இலக்கியம், ஆன்மிகம், பண்பாடு, அன்பின் மேன்மை போன்ற வாழ்வியல் நெறிகளுக்கான பதிலை, இக்கால இளைஞர்கள் இணையத் தளங்களிலும் வெளியுலக வாழ்க்கையிலும் தேடி வருகின்றனர்.

பெரிய புராண நூலில் இவ்வனைத்து கூறுகளும் திறம்பட உணர்த்தப்பட்டுள்ளதால், இந்நூலை இளைஞர்கள் முறையாக கற்றுப் புரிந்து கொண்டாலே, முற்போக்கான வாழ்க்கை மாற்றத்தை அவர்களால் அறிய முடியும் என்று படைப்பாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

''நான் இன்று சண்டீசநாயனாரின் கதையை படைத்துள்ளேன். இந்நாள் வரை எனக்கு தெரியாத பல புதிய செய்திகளை இதன் மூலம் தெரிந்து கொண்டேன். என்னால் மற்றவர்களுக்கு இந்த கதையும் அதனின் வரலாறும் தெரிய வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி'', என்றார் ஜெய்வின் கலையரசன்.

"சிறு வயதிலிருந்தே என் பெற்றோர்கள் எனக்கு தேவாரம் கற்றுக் கொடுத்து வளர்த்தனர். உணவு அருந்து முன் குறைந்த பட்சம் ஒரு தேவாரமாவது பாட வேண்டும் என்ற அறிவுரையை இன்று வரை நான் பின்பற்றி நடக்கிறேன். ஆரம்ப காலங்களின் எனக்கு கடினமாக தான் இருந்தது. இருப்பினும் நாளடைவில் அதனின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டேன்,'' என ஐலீஸ் தியாகராஜ் கூறினார்.

கோலாலம்பூர், விஸ்மா துன் சம்பந்தனில் உள்ள டான் ஶ்ரீ சோமா அரங்கத்தில் மாலை வரை நடைபெற்ற இவ்விழாவில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)