தாய்லாந்து, 08 டிசம்பர் (பெர்னாமா) -- இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தராக இருந்த அமைதித் திட்டம் தோல்வியடையக்கூடும் என்பதற்கான அறிகுறியாக கம்போடியா-தாய்லாந்து எல்லையில் புதிய சண்டை ஏற்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து இன்று கம்போடியா மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.
பல வாரங்களாக அதிகரித்த பதற்றங்கள் மற்றும் தாய்லாந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை நிறுத்தி வைத்தப் பிறகு, இன்று காலை அந்த சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் தாக்குதல்களை நடத்தியதாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர்.
தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டு இரண்டு பேர் காயமடைந்த அதிகாலை தாக்குதலுக்குப் பதிலடியாக கம்போடிய இராணுவம் மீதான வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக தாய்லாந்து இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்று அந்நாட்டு நேரப்படி அதிகாலை மணி 3 அளவில் கம்போடியா, தாய்லாந்து எல்லையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கியதாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்தது.
தாய்லாந்து தரப்பு அதிகாலை மணி 5.04 அளவில் தங்கள் படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக கம்போடிய இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தாய்லாந்து மக்களில் சுமார் 70 விழுக்காட்டினர் எல்லை பகுதிக்கு அருகில் உள்ள நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)