பொது

2 கோடியே 38 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள ஐந்து திட்டங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல்

10/12/2025 05:24 PM

கோலாலம்பூர், டிசம்பர் 10 ( பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் இந்திய நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட சுமார் 2 கோடியே 38 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள ஐந்து திட்டங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் 270-க்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சு MITI-இன் துணை அமைச்சர் லியூ சின் தொங் கூறினார்.

1980 முதல் 2025 செப்டம்பர் மாதம் குறிப்பாக ஜூன் மாதம் வரை இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளை உள்ளடக்கிய உற்பத்தி திட்டங்களின் மதிப்பு 4880 கோடி ரிங்கிட்டாக இருந்ததாக லியூ சின் தொங்  தெரிவித்தார்.

“மருந்துகள், மருத்துவ சாதனங்கள், இரசாயனங்கள், இரசாயன பொருட்கள், உலோக உற்பத்தி, எண்ணெய் வேதிப்பொருள்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் 176 திட்டங்களை உள்ளடக்கியது. இந்த ஒட்டுமொத்த முதலீடு 16,000-க்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.'' என்றார் லியூ சின் தொங் 

மலேசியாவும் இந்தியாவும் கையெழுத்திட்ட முதலீட்டு ஒப்பந்தத்தின் நிலை மற்றும் நாட்டின் நேர்மறையான தாக்கம் குறித்து செனட்டர் டத்தோ ஶ்ரீ வேல்பாரி எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

முழுமையான மற்றும் நிலையான Semikonduktor எனப்படும் மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறை மதிப்புச் சங்கிலியை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளை விரிவுப்படுத்த அத்துறையில் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பணியில் மலேசியா தற்போது ஈடுபட்டுள்ளதாக, லியூ சின் தொங் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)