விளையாட்டு

2025 சீ விளையாட்டுப் போட்டி; மலேசியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

12/12/2025 04:44 PM

பேங்காக், 12 டிசம்பர் (பெர்னாமா) -- தாய்லாந்து 2025 சீ விளையாட்டுப் போட்டியில், தேசிய மகளிர் சுத்தியல் எறிதல் வீராங்கனை கிரேஸ் வோங் சியூ மேய் தங்கம் வென்று சாதனையை புரிந்திருக்கிறார்.

இன்று சுபாசாலாசாய் தேசிய அரங்கில் நடைபெற்ற போட்டியில், அவர் சீ விளையாட்டுப் போட்டியின் சாதனையையும் நான்கு முறை முறியடித்திருக்கிறார்.

2023-ஆம் ஆண்டு கம்போடியாவில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில் தாம் பதிவு செய்த 61.87 மீட்டர் தூரத்தை கடந்து இம்முறை 63.34 மீட்டர் வரை சுத்தியல் எறிந்து இன்றைய ஆட்டத்தை கிரேஸ் சிறப்பாகத் தொடங்கினார்.

தொடர்ந்து, இரண்டாவது முறை 63.83 மீட்டர் தூரம் எறிந்து சீ விளையாட்டுப் போட்டியின் புதிய சாதனையைப் படைத்தார்.

இதன் வழி, தமது சொந்த தேசிய சாதனையையும் அவர் முறியடித்தார்.

அதன் பின்னர் மூன்றாவது முறை 65.09 மீட்டர் தூரமும், நான்காவது முறை 65.41 மீட்டர் தூரமும் வீசி, கிரேஸ் புதிய சாதனையை படைத்தார்.

இதன் வழி போட்டியின் நான்கு புதிய சாதனைகளை படைத்து, தமது தேசிய சாதனையும், சரவாக் மாநிலத்தை சேர்ந்த அவர் புதுப்பித்துள்ளார்.

"இந்த முறை தாய்லாந்தும் தங்கம் வெல்ல இலக்கு வைத்தது. ஏனென்றால் இந்த விளையாட்டு அவர்களின் இடத்தில் நடைபெறுகிறது அல்லவா. எனவே மற்றவர்களின் நிலத்தில் இதைச் (சாதனை) செய்து நாட்டையும் பெருமைப்படுத்த முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்," என கிரேஸ் வோங் சியு மெய் கூறினார்.

இப்போட்டியின் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை தாய்லாந்து வென்றது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)