சுபாங் ஜெயா, டிசம்பர் 13 ( பெர்னாமா) -- கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி, கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம், ஏ.ஆர்.தி-க்கும் மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை தற்காப்பு அமைச்சு மறுத்துள்ளது.
மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், பிணைப்பில்லாதது என்றும் 2020-ஆம் ஆண்டு முதல் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்ததாகவும் தற்காப்பு அமைச்சர், டத்தோ செரி முஹமட் காலிட் நொர்டின் தெளிவுப்படுத்தினார்.
ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டம், ஏ.டி.எம்.டி மற்றும் ஏ.டி.எம்.டி-Plus-சின் மத்தியில், அக்டோபர் 25-ஆம் தேதி, அமெரிக்காவின் போர் துறையுடன் தற்காப்பு அமைச்சு கையெழுத்திட்ட தற்காப்பு ஒத்துழைப்பு ஆவணம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமே தவிர உடன்படிக்கை அல்ல என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ செரி முஹமட் காலிட் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் உள்ளடக்கம், மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இரு தரப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது.
அதில், திறன் மற்றும் கொள்ளளவு மேம்பாடு, இராணுவப் பயிற்சி மற்றும் இராணுவக் களப்பயிற்சி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தற்காப்புத் துறையுடன், 2008-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் மலேசியா-அமெரிக்க வியூக பேச்சுவார்த்தை, எம்.யு.எஸ்.எஸ்.தி மூலம் பரஸ்பரமாக ஒப்புக் கொள்ளப்பட்ட பிற பகுதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)