பொது

கம்போடியா-தாய்லாந்து: டிரம்புடன் அன்வார் மீண்டும் பேச்சுவார்த்தை

13/12/2025 04:22 PM

கோலாலம்பூர், டிசம்பர் 13 (பெர்னாமா) -- கம்போடியா-தாய்லாந்து மோதல் தொடர்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்புடன் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விவாதித்துள்ளார்.

டிராம்பிடம் இருந்து தனக்கு வந்த தொலைப்பேசி அழைப்பின்போது அவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக இன்று தமது முகநூல் பதிவில் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளையில், இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன் தொடர்புடைய உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

கம்போடிய - தாய்லாந்து எல்லையில் ஏற்பட்டிருக்கும் மோதலில் இரு நாடுகளும் அமைதியைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தை மற்றும் இருதரப்பு மற்றும் ஆசியான் வழிமுறைகள் வழியாகவும் மீண்டும் சமரச பேச்சுவார்த்தையைத் தொடங்க மலேசியாவின் பங்கு குறித்தும் அவர் விளக்கினார்.

மேலும், ஆசியான் ஒரு நல்ல அண்டை நாடு எனும் உணர்வுக்கு ஏற்ப தற்போதைய பதற்றத்தைத் தணிக்கவும் பொதுமக்களைப் பாதுகாக்கவும் வட்டார நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும் மலேசியா தொடர்ந்து உதவத் தயாராக இருப்பதாகவும் அன்வார் கூறினார்.

எனவே, ஆசியான் தலைவராக மலேசியா கூடிய விரைவில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து நிலைமையை மதிப்பிடவும் வட்டாரத்தில் பதற்றங்களைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை ஆதரிக்கும்.

இதனிடையே ஆசியான் அமைப்பில் அமெரிக்காவின் தீவிர ஈடுபாட்டிற்கும் 2025ஆம் ஆண்டு ஆசியான் தலைவர் என்ற வகையில் மலேசியா மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கும் அன்வார் நன்றி பாராட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)