சிரம்பான், டிசம்பர் 13 (பெர்னாமா) -- போர்ட்டிக்சன் டோல் பிளாசாவை நோக்கிச் செல்லும் ராசா-மாம்பாவ் சாலையில் கடந்த புதன்கிழமை ஆடவர் ஒருவர் காருக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ரகசிய கும்பலைச் சேர்ந்தவர்களின் பழிவாங்கல் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உதவுவதற்காக இதுவரை மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் சில தோட்டாக்களைப் போலீசார் கைப்பற்றினர்.
இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உதவுவதற்காக மேலும் சில சந்தேக நபர்களும் சாட்சிகளும் இன்னும் தேடப்பட்டு வருவதாக நெகெரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அஹமட் தெரிவித்தார்.
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இதுவரை எழுவர் அழைக்கப்பட்டுள்ளனர்.
பழிவாங்கும் நோக்கத்திற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகப் போலீசார் கருதுகின்றனர்.
உயிரிழந்த அந்த ஆண் ஒரு ரகசிய கும்பலின் தலைவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் காயமடைந்த மற்றோர் ஆணின் பாதுகாவலர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் டத்தோ அல்சாஃப்னி அஹமட் விவரித்தார்.
காலை மணி 7.30 அளவில் நடந்த அச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு ஆளான 43 வயதுடைய அவ்வாடவர் தூங்கு ஜாஃபர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் வாகனத்தில் இருந்த 47 வயதுடைய ஆடவர் காயங்களுடன் உயிர்த்தப்பினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)