பொது

இந்தியர்களிடையே அதிகரிக்கும் குடும்ப வன்முறை

13/12/2025 05:38 PM

கோலாலம்பூர், நவம்பர் 13 (பெர்னாமா) --  குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நிகழும் வன்முறைகள் இந்திய சமூகத்தில் நாளுக்கு நாள் பெரும் கவலைக்குரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது.

பெண்கள், குழந்தைகள் மட்டுமல்லாது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் பாதிக்கும் இந்த வன்முறை, சமூக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதில் மக்கள் பாதிக்கப்படுவதற்கான காரணங்களையும் அதனை எதிர்கொள்வதற்கான சட்டமுறைகள் பற்றியும் துல்லியமாக பகர்கின்றார், கூட்டரசுப் பிரதேசத் துறையின் தலைமை உதவி இயக்குநர் ஏ.வி. கோபால் ஏகாம்பரம்.

மக்கள் தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை மூன்றாவது இடத்தில் இருந்தாலும், குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களில் விழுக்காடு ரீதியாக இந்தியர்களே முதல் இடத்தில் இருப்பதாக ஏ.வி. கோபால் ஏகாம்பரம் தெரிவித்தார்.

இன்றைய காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளிப்பதற்கு முன் வருவதால், அதிகமான சம்பவங்கள் பதிவாகுவதை அறிந்து கொள்ள முடிவதாக கூறிய கோபால், அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

''சிலர் குடும்ப கெளரவம், அவமானம் இவைகளைக் கருத்தில் கொண்டு புகார் அளிக்கத் தயங்குவார்கள்..சட்ட ரீதியாக சில விவகாரங்களைச் சந்திக்கக்கூடும் என்ற பயம் அவர்களுக்கு இருந்திருக்கும். இப்போது காலம் மாறிவிட்டது. புகார் செய்ய முன் வருகிறார்கள்.'' என்றார் அவர்.

முன்னதாக, கடந்த காலங்களில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் பெரும்பாலும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக இதில் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு, தம்பதியர்களுக்கு இடையே இருக்கும் வயது வேற்றுமை ஒரு முக்கியக் காரணமாக இருந்து வருவதாக கோபால் கூறுகின்றார்.

தற்போது குடும்ப வன்முறை சட்டம் உட்பிரிவு சட்டம் 521 அமலில் இருந்து வருகிறது.

இச்சட்டம் பெண்களுக்கு மட்டும் என்று சிலர் தவறான புரிதலைக் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டினார்.

ஆனால், இது சம்பந்தப்பட்ட குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏற்ற சட்டம் என்று அவர் விளக்கினார்.

''பொதுவாக மக்கள் நினைப்பது என்னவென்றால், மனைவிக்கு மட்டும்தான் இந்தச் சட்டம் என்று. இது ஒரு தவறான கருத்து. தவறான பார்வை. சம்பந்தப்பட்ட வீட்டில் எத்தனைப் பேர் இருக்கிறார்களோ அத்தனைப் பேருக்கும் பொருந்தும். மாமனார், மாமியார், உறவினர் பிள்ளைகள் உட்பட அனைவருக்கும் ஏற்றச் சட்டமாகும்.'' என்றார் அவர்.

இதனிடையே, வன்முறை நிகழும் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்று கோபால் குறைப்பட்டுக் கொண்டார்.

அதே வேளையில், சிறுவர்கள் எதிர்காலத்தில் தவறான வழிக்கு செல்வதற்கும் சிறு வயதில் இருந்து கடந்து வந்த குடும்ப வன்முறை ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே, வளரும் தலைமுறையினரின் எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு குடும்ப உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

அதே வேளையில், குடும்ப வன்முறையில் பாதிக்கப்படும் நபர்களும் புகார் அளிக்க முன் வர வேண்டும் என்று பெர்னாமாவில் பார்வை நிகழ்ச்சிக்கு வழங்கிய நேரகாணலின் வழி அவர் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)