பினாங்கு, 14 டிசம்பர் (பெர்னாமா) -- ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான நடவடிக்கையாக, மலேசிய கல்வி அமைச்சின் பயிற்சி நிர்வகிப்பு அமைப்பான எஸ்.பி.எல்.கே.பி.எம்-ஐ நிறுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
இந்த அமைப்பு தங்களின் அடிப்படை கடமைகளில் கவனம் செலுத்துவதை பாதிப்பதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
ஆசிரியர் பணிச்சுமை பிரச்சினையை நிவர்த்தி செய்ய, மாணவர் கட்டொழுங்கு அமைப்பில் மேம்பாடுகள் உட்பட பல்வேறு முயற்சிகளை கல்வி அமைச்சு முன்னதாக செயல்படுத்தியுள்ளதை ஃபட்லினா சிடேக் சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர்கள் வகுப்பறையில் முழுமையாக கவனம் செலுத்த இடம் அளிப்பதை எஸ்.பி.எல்.கே.பி.எம்-ஐ நீக்கும் நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்,
குறிப்பாக அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் புதிய பாடத்திட்டம் மற்றும் கல்வி மேம்பாட்டுத் திட்டம் நாட்டின் கல்வி துறையை மேம்படுத்தும் என்றும் ஃபட்லினா சிடேக் கூறினார்.
''இன்று, கல்வி அமைச்சு எஸ்.பி.எல்.கே.பி.எம் ஆசிரியர்களின் நலனையும் அவர்களின் பணிச்சுமையையும் நேரடியாகப் பாதிக்கும் என்பதால் அதை நிறுத்தவிருப்பதாக அறிவித்தது. இது கல்வி அமைச்சின் தொடர்ச்சியான உறுதிப்பாடாகும். எனவே ஆசிரியர்கள் மீதான சுமையைக் குறைக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வோம், மேலும் நமது ஆசிரியர்கள் மீதான ஒட்டுமொத்த தாக்கத்தையும் கண்காணிப்போம்.'' என்றார் ஃபட்லினா சிடேக்
ஞாயிற்றுக்கிழமை பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஷேக் தாஹிர் ஜலாலுதீன் மத தேசிய இடைநிலைப்பள்ளியின் கட்டுமான நிறைவு விழாவில் கலந்து கொண்ட பின்னர், ஃபட்லினா செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ)