பொது

வியாழன் வரை நாட்டிலுள்ள பல மாநிலங்களில் தொடர் மழை பெய்யும்

14/12/2025 05:10 PM

கோலாலம்பூர், டிசம்பர் 14 (பெர்னாமா) -- வரும் டிசம்பர் 18-ஆம் தேதி வியாழக்கிழமை வரை, நாட்டிலுள்ள பல மாநிலங்களில் தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட் மலேசியா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

அதிலும் கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநிலங்கள் முழுவதும் கடுமையான தொடர் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், மெட் மலேசியாவின் தலைமை இயக்குநர்  டாக்டர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப் தெரிவித்தார்.

இதே எச்சரிக்கை பகாங்கில் குவாந்தான், பெக்கான், ரொம்பின் போன்ற பல பகுதிகளிலும், ஜோகூரில், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கியிலும் விடுக்கப்பட்டுள்ளன.

எச்சரிக்கை மட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பேராக்கில் ஹுலு பேராக் மற்றும் கோலா கங்சார், பகாங்கில் கேமரன் மலை, லிபிஸ், ஜெராந்துட், தெமெர்லோ, மாரான் மற்றும் பேரா ஆகிய பகுதிகளுடன் ஜோகூர் மாநிலத்தில் செகாமாட், க்லுவாங், பொந்தியான், கூலாய், ஜொகூர் பாரூ ஆகிய பகுதிகளும் இக்காலக்கட்டத்தில் பாதிப்பை எதிர்கொள்ளும் என்று டாக்டர் முஹமட் ஹிஷாம் கூறியிருந்தார்.


அதைத் தவிர்த்து சரவாக்கில் கூச்சிங், செரியான், சமாரஹான், ஶ்ரீ அமான், பெதோங், சாரிகேய். சிபு மற்றும் மூகா ஆகிய பகுதிகளிலும் டிசம்பர் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை தொடர் மழை பெய்யும் என்று கணிக்கப்படுள்ளது.

இதனிடையே வானிலை குறித்த அண்மையில் தகவல்களை தெரிந்து கொள்ள மெட் மலேசிய அகப்பக்கம் அல்லது அதன் சமூக வலைத்தளம் ஆகியவற்றுடன் myCuaca செயலியையும் பொதுமக்கள் அணுகலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)