சிறப்புச் செய்தி

டிசம்பரில் காய்கறிகளின் விலை அதிகரிக்கலாம் - பி.ப.ச எச்சரிக்கை

14/12/2025 05:28 PM

கோலாலம்பூர், நவம்பர் 14 (பெர்னாமா) --  மழைக்காலத்தில் நாட்டில் விவசாய விளைச்சல்களில் பாதிப்புகளும் அதனால் ஏற்படும் விலை உயர்வுகளையும் தவிர்க்க இயலாது.

காய்கறி விலையில் ஏற்படும் மாற்றங்கள், பயனீட்டாளர்கள் மட்டுமின்றி வியாபாரிகளுக்கும் சவால் மிக்க சூழலை உருவாக்கிவிடுகிறது.

காய்கறிகளின் விலை கடுமையாக உயர்வதை உணர்ந்தால், அதனை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்ல பயனீட்டாளர்களும் வியாபாரிகளும் இருவருமே முன்வர வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் ஏற்படும் மழைக்காலத்தால் காய்கறிகளின் விலை அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி & ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் கேட்டுக் கொண்டார்.

''டிசம்பர் மாதம் நாடு முழுவதும் குறிப்பிட்ட சில மாநிலங்களில் தொடர்ந்து மழைப் பெய்யும். அதே போலே, மழைப் பெய்யாத மாநிலங்களில் கூட, இப்பொழுது மழைப் பெய்ய  தொடங்கிவிட்டது. இந்த மழை பெய்கின்ற காரணத்தினால் காய்கறிகள் விலை உட்பட பழங்களின் விலையும் கண்டிப்பாக அதிகரிக்கும்,'' என்றார் அவர்.

நான்கு ரிங்கிட்டிற்கு விற்கப்பட்ட காய்கறிகள் தற்போது ஒன்பது ரிங்கிட் வரை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாக சுப்பாராவ் சுட்டிக் காட்டினார்.

மக்கள் இதனைக் கருத்தில் கொண்டு, காய்கறிகளை குறைந்த எண்ணிக்கையில் வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், உணவுகளை கூடுதலாக சமைத்து விரயமாக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

இதனிடையே, காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தால் வியாபாரிகள் மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகளையும் அவர் விளக்கினார்.

''காய்கறிகளின் விலை அதிகமாக இருப்பதை இந்தச் சில்லறை வியாபாரிகள் உணர்ந்தால் அமைச்சிடம் புகார் செய்ய வேண்டும். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆலோசனையைப் பெறலாம். பயனீட்டாளர்கள் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்தால், சில்லறை வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் என்று அனைவரும் பாதிக்கப்படுவார்கள்,'' என்றார் அவர்.

இது குறித்து, காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் மூலமாக அமைச்சின் கவனத்திற்கு கொண்டுச் சென்றால் விலை ஏற்றத்தால் பாதிக்கப்படும் அனைவருக்கும் ஒரு தீர்வுக் கிடைக்கும் என்றார் அவர்.

இதனிடையே, இன்னும் இரண்டு மாதங்களில் கொண்டாடப்படவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு கடல்வாழ் உணவுகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் எனும் கூடுதல் தகவலையும் சுப்பாராவ் பகிர்ந்து கொண்டார்.

ஆகவே, மக்கள் அவற்றை வாங்குவதில் முன்கூட்டியே திட்டமிட்டு சிக்கனமாக செலவிட வேண்டும் என்று பெர்னாமாவிற்கு வழங்கிய நேர்காணல் வழி அவர் அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)